ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி… இளைஞரும் உயிரிழப்பு!!
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் முன்பு பாய்ந்த காதல் ஜோடியில் ஏற்கனவே பெண் உயிரிழந்த நிலையில், தற்போது இளைஞரும் உயிரிழந்தார்.
கடந்த 26ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளம் பெண்ணும், இளைஞரும் திடீரென தாம்பரம் செல்லும் மின்சார ரயில் முன் குதித்தனர். அதில் இளம்பெண் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயம் அடைந்த இளைஞர் சிகிச்சைக்காக ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரும் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அதில், இளைஞர் கீழ் கட்டளை பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் என்பதும், இவர் தனியார் கல்லூரியில் படித்து வருவதும் தெரிய வந்தது. அந்த பெண் லேக் வியூ தெருவைச் சேர்ந்த சிம்ரன் குமாரி என கண்டுபிடித்தனர்.
அவர் மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இதையடுத்து இளங்கோவன் மற்றும் சிம்ரன் குமாரிக்குப் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
சிம்ரன் குமாரியின் காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரியவந்ததை அடுத்து, இளங்கோவனுடன் பழகக் கூடாது என்று கூறி கண்டித்துள்ளனர். இருப்பினும் பெற்றோர்களுக்குத் தெரியாமல் இருவரும் சந்தித்து வந்தனர்.
இதனையடுத்து இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். பெண் அப்போதே உயிரிழந்த நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாம்பலம் ரயில்வே போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in