வேலை கொடுக்காததால் பெட்ரோல் பங்கில் குண்டு வீச்சு!!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பலமுறை கேட்டும் வேலை கொடுக்காததால் இளைஞர் ஒருவர் பெட்ரோல் பங்க் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரமக்குடி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கிற்கு இரவு நேரத்தில் வந்த இளைஞர் ஒருவர், திடீரென கையில் இருந்த பெட்ரோல் குண்டை பங்க் மீது வீசி எறிந்தார். பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியதை அடுத்து ஊழியர்கள் பதற்றம் அடைந்தனர்.
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பெட்ரோல் குண்டை வீசிய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனையடுத்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார், விசாரணை நடத்தினர். தொடர்ந்து பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்த இளைஞர் பரமக்குடி அரசு ஐ.டி.ஐ. எதிரே வசித்து வரும் கணேசன் (35) என்பது தெரிய வந்தது. உடனடியாத அவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அந்த இளைஞர் பலமுறை அந்த பெட்ரோல் பங்கில் சென்று வேலை கேட்டதாகவும், ஆனால் அவர்கள் வேலை கொடுக்காததால் ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவரை சிறையில் அடைத்தனர்.
newstm.in