குழந்தைக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டிய பாகிஸ்தான் தம்பதி.. காரணம் என்ன தெரியுமா..?

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகர் ஒமர் இசா. இவரது மனைவி வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். ஒமர் இசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மனைவிக்கும் அவருக்கும் நடுவில் அவர் மகன் படுத்து உறங்குவது போல ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அது குறித்து நீண்ட பதிவையும் எழுதியுள்ளார்.
அந்த பதிவில், “புதிய பெற்றோர் அனைவருக்கும் என்னுடைய எச்சரிக்கை. எங்களது குழந்தை இப்ராஹிம் பிறந்தவுடன் அவனை எங்கள் அறையிலேயே படுக்க வைத்துக் கொண்டோம். புதிதாக பெற்றோரான எங்களுக்கு அவன் பாதுகாப்பு குறித்து அதீத அக்கறை இருந்தது. இப்ராஹிம் வளர்ந்த பிறகும் கூட எங்கள் அறையிலேயே படுத்து உறங்குகிறான். அவனுக்கென தனி அறை இருந்தாலும் கூட எங்கள் அறையையே தூங்குவதற்கு பயன்படுத்திக் கொள்கிறான்.
நான் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவன். எனது மனைவி வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். எங்களுக்கு நடுவில் படுத்திருக்கும் எங்கள் மகன் இப்ராஹிமுக்கு புதிய பெயர் சூட்டியுள்ளோம். பாகிஸ்தானியருக்கும் வங்கதேசத்தை சேர்ந்தவருக்கும் நடுவில் படுத்திருப்பதால் அவனை 'இந்தியா' என அழைக்கிறோம். 'இந்தியா' எனது வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது. நகைச்சுவையாக இந்த பதிவை எழுதியதாக ஒமர் இசா தெளிவுபடுத்தியுள்ளார்.