காதல் விவகாரம்.. தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை..!
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த ஊழியப்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு மனைவி மற்றும் 4 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் வஸ்மிதா (21). ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து விட்டு, காரைக்காலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வஸ்மிதா வீட்டின் அறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். இதனால் சந்தேகம் அடைந்த முருகன் கதவை தட்டிப்பார்த்தார். நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் வஸ்மிதா கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வஸ்மிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நிரவி போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், வஸ்மிதாவும் காரைக்கால் புதிய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் கடந்த 5 ஆண்களாக காதலித்து வந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அந்த வாலிபருக்கு, “இனிமேல், என்னால் உங்களுக்கு தொல்லைகள் வராது" என மெசேஜ் அனுப்பி விட்டு தற்கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.