1. Home
  2. தமிழ்நாடு

சரக்கு விற்றதில் சாதனை புரிந்தவருக்கு விருது.. சர்ச்சையானதால் திரும்ப பெறப்பட்டது..!

சரக்கு விற்றதில் சாதனை புரிந்தவருக்கு விருது.. சர்ச்சையானதால் திரும்ப பெறப்பட்டது..!

குடியரசு தின விழாவில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உள்ளிட்ட 4 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்ட நிலையில், இதுகுறித்து சர்ச்சைகள், விமர்சனங்கள் எழுந்தன. அத்துடன், மீம்ஸ்கள் மூலம் கிண்டலடிக்கப்பட்டதால், அவர்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்கள் திரும்பப் பெறப்பட்டன.

நாட்டின் 74-வது குடியரசு தின விழா கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பணியாளர்களுக்கு கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.


இதில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சண்முகவடிவேல், மேற்பார்வையாளர்கள் சிவகுமார், ஆறுமுகம், விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேருக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டும் பணியை சிறப்பாக மேற்கொண்டமைக்காக பாராட்டி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நற்சான்றிதழ் வழங்கப்படுவதாக அந்தப் பாராட்டுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மாவட்டத்தில் மது விற்பனையை அதிகரித்த அதிகாரி மற்றும் ஊழியர்களுக்கு குடியரசு தின விழாவில் கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியதுடன், சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புக்குள்ளானது.

சரக்கு விற்றதில் சாதனை புரிந்தவருக்கு விருது.. சர்ச்சையானதால் திரும்ப பெறப்பட்டது..!

இந்நிலையில், டாஸ்மாக்கில் சிறப்பாக சரக்கு விற்றவருக்கு குடியரசு தினத்தில் சிறப்பு விருது என்ற வாசகத்துடன், மேற்பார்வையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழின் படத்துடன் வடிவேலு படத்தை வைத்து ‘விக்கிறவுனுக்கு மட்டும்தானா?, அதிகமா குடிக்கிற எங்களுக்கு எப்ப சார் விருது குடுப்பீங்க..?’ என கிண்டலடித்து மீம்ஸ் வெளியாகி அதிகம் பகிரப்பட்ட நிலையில், மாவட்ட மேலாளர், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்கள் மட்டும் (கேடயம் திரும்பப் பெறப்படவில்லை) மாவட்ட நிர்வாகத்தால் திரும்பப் பெறப்பட்டது.

Trending News

Latest News

You May Like