தேர்வு முடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவல்ல - பிரதமர் மோடி..!!
மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் பிரதமர் மோடி கலந்துரையாடும், உலகின் மிகப் பெரிய தேர்வு திருவிழாவான ‘தேர்வும் தெளிவும் - பரீட்சையை பற்றி விவாதிப்போம்' நிகழ்ச்சி நடைபெற்றது.
டெல்லி தல்கோத்ரா மைதானத்தில் இருந்து பிரதமர் மோடி, உலகம் முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கேள்விகள், சந்தேகங்களுக்கு காணொலி வாயிலாக பதில் அளித்தார். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விமர்சனங்கள் குறித்து மாணவர் ஒருவர் கேட்டதற்கு நகைச்சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் பதிலளித்தார் பிரதமர் மோடி. அவர் கூறியதாவது:-
இந்த கேள்வி பாடத்திட்டத்திற்கு வெளியே உள்ள பகுதி (அவுட் ஆப் சிலபஸ்). விமர்சனம் என்பது வளமான ஜனநாயகத்திற்கான சுத்திகரிப்பு யாகம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. விமர்சனம் செய்வதற்கும் குற்றம் சாட்டுவதற்கும் வித்தியாசம் உள்ளது. மதிப்பெண்களுக்காக குழந்தைகள் மீது தேவையற்ற அழுத்தம் கொடுப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் கடின உழைப்பாளி மற்றும் நேர்மையானவராக இருந்தால், விமர்சனங்களைப் பற்றி கவலைப்படக்கூடாது. ஏனென்றால் அவை உங்களின் பலமாக மாறும். குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் இயற்கையானது, ஆனால் குடும்பம் சமூக நிலையைப் பார்த்தால், அது ஆரோக்கியமாக இருக்காது. அழுத்தங்களால் சோர்ந்துவிடாதீர்கள். கவனத்தை சிதற விடாமல் இருங்கள். சிந்தியுங்கள், மதிப்பாய்வு செய்யுங்கள், செயல்படுங்கள்... பின்னர் நீங்கள் விரும்புவதை அடைய முடிந்த முயற்சிகளை செய்யுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
நேர மேலாண்மை குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர், நேர மேலாண்மை என்பது தேர்வுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் மிக அவசியமானது. உங்கள் வேலைக்கு மட்டும் முன்னுரிமை கொடுங்கள். உங்கள் அம்மா எப்படி நேரத்தை பயன்படுத்துகிறார் என்று கவனியுங்கள். அதிலிருந்து நீங்கள் உங்கள் நேரத்தை எவ்வாறு திட்டமிடுவது என்பதை தெரிந்து கொள்ளமுடியும்' என்றார்.
தேர்வினால் வரும் மன அழுத்தத்தை எவ்வாறு தவிர்ப்பது என மதுரையை சேர்ந்து அஸ்வினி பிரதமரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, முதல் பந்திலேயே அஸ்வினி என்னை அவுட்டாக்க பார்க்கிறார் என பிரதமர் மோடி நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
தேர்வில் மாணவர்களிடம் பெற்றோர்கள் அதிகம் எதிர்பார்ப்பது இயற்கையானது தான். எதிர்ப்பார்புகளை பற்றி மாணவர்கள் கவலைப்படமல் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேர்வு மதிப்பெண் குறித்து அழுத்தம் கொடுக்க வேண்டாம். சில மாணவர்கள் தேர்வில் ஏமாற்றுவதற்கு தங்கள் படைப்பாற்றலை பயன்படுத்துகிறார்கள். மாணவர்கள் தங்கள் நேரத்தையும் படைப்பாற்றலையும் நல்ல முறையில் பயன்படுத்தினால் வெற்றி கிட்டும் என்றார்.
சில மாணவர்கள் தேர்வில் ஏமாற்றுவதற்கு தங்கள் படைப்பாற்றலை பயன்படுத்துகிறார்கள். மாணவர்கள் தங்கள் நேரத்தையும் படைப்பாற்றலையும் நல்ல முறையில் பயன்படுத்தினால் வெற்றி கிட்டும். வாழ்க்கையில் குறுக்குவழிகளை நாம் ஒருபோதும் தேர்வு செய்யக்கூடாது, நம்மீது கவனம் செலுத்துங்கள் என்றார். இந்தியாவில் மக்கள் சராசரியாக 6 மணி நேரம் திரையில் செலவிடுகிறார்கள். இது கவலைக்குரிய விஷயமாகும். கடவுள் நமக்கு ஒரு சுதந்திரமான இடத்தையும், அபரிமிதமான ஆற்றலுடன் தனித்துவத்தையும் கொடுத்திருக்கும் போது, ஏன் கேளி நிழச்சிகளுக்கு அடிமையாக இருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.