1. Home
  2. வர்த்தகம்

மகளிர் குழுக்களுக்கு குட் நியூஸ்.. கடன் அளவு அதிகரிப்பு.. அமைச்சர் நேரு தகவல்..!


சேலத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்றிருந்த கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் மற்றும் புதிய கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கியதோடு மீண்டும் கடனுதவி வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “மகளிர் சுய உதவிக் குழுவினர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெற்ற 31.3.2021ம் தேதி வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் 2,756 கோடி ரூபாய் மகளிர் குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


இதில், சேலம் மாவட்டத்தில் மட்டும் 5241 மகளிர் சுய குழுக்களைச் சேர்ந்த 51,023 பெண்கள் கூட்டுறவு அமைப்புகளில் பெற்றிருந்த 134.40 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் மீண்டும் புதிதாக மகளிர் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டமும் இன்று முதல் தொடங்கி வைக்கப்படுகிறது.

கூட்டுறவு சங்கங்களில் சுய உதவிக்குழுக்கள் உறுப்பினராக சேர்வதற்கு குறைந்தபட்சம் 12 நபர்கள், அதிகபட்சம் 20 நபர்கள் இருக்க வேண்டும். தற்போது, மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் அளவு 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. குழுவின் சேமிப்பு தொகைக்கு ஆறு மடங்காக கடனுதவி வழங்கப்படுகிறது. 36 மாதங்களில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் பொருளாதாரம் மேம்படுகிறது. அவசர கடன் தேவைகளை சுயமாக பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது. கந்துவட்டிக்கு கடன் வாங்குவது தவிர்க்கப்படுகிறது. குடும்ப பொருளாதாரம் உயர்வதோடு பெண்களின் பெயரில் சொத்துக்களை உருவாக்க முடிகிறது” என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like