ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய கல்லூரி மாணவனுக்கு ஏற்பட்ட சோகம்..!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பன்னீர்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிச்சையம்மாள். இந்த தம்பதியின் மூன்றாவது மகன் சண்முக பிரியன். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் சுகாதார ஆய்வாளர் பிரிவு 2ம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில் விடுமுறைக்காக திருவனந்தபுரத்திலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் நாகர்கோவிலில் இருந்து பயணித்தார்.
திருமங்கலம் ரயில் நிலையத்தின் அருகே ரயில்வே தண்டவாள பணிகள் நடைபெற்று வருவதால் முதலாவது நடைமேடை பகுதியில் வரக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் திருமங்கலம் ரயில் நிலையத்தில் குறைந்த வேகத்தில் செல்லும். எக்ஸ்பிரஸ் ரயில்கள் பெரும்பாலும் திருமங்கலம் ரயில் நிலையத்தில் நிற்காது என்பதால் திருமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்தால் மதுரை ரயில் நிலையம் சென்று அங்கிருந்து மீண்டும் பேருந்து மூலமாக திருமங்கலம் வர வேண்டும்.
திருமங்கலம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மெதுவாக செல்வதால் பலரும் அடிக்கடி ஓடும் ரயிலில் இருந்து இறங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதே போல் சண்முகப்பிரியனும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் குறைந்த வேகத்தில் சென்றதால் திருமங்கலத்தில் இறங்கி விடலாம் என நினைத்து இறங்கிய போது கால் தவறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே உள்ள இடைவெளியில் தவறி விழுந்ததில் ரயில் சக்கரம் சண்முகப்ரியன் மீது ஏறி இறங்கியதில் உடல் இரண்டு துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், உயிரிழந்த மாணவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.