1. Home
  2. தமிழ்நாடு

இது குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை.. கலெக்டர் எச்சரிக்கை..!

இது குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை.. கலெக்டர் எச்சரிக்கை..!

புதுச்சேரி மரப்பாலம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் வருகிற 30 மற்றும் 31-ம் தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 20 நாடுகளைச் சேர்ந்த 125 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இவர்கள் அக்கார்டு, தி ரெசிடென்சி, ரேடிசன் ஆகிய ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

இதனிடையே, புதுவையில் வெளிநாட்டு பிரதிநிதிகள் செல்லும் வழியெங்கும் அழகுபடுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. புதிதாக தார் ஊற்றப்பட்டு சாலைகளும் செப்பனிடப்பட்டு வருகின்றன. சாலையோர ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படுகின்றன.


இத்தகைய சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் நேற்று தகவல் ஒன்று பரவியது. அதில், ‘புதுச்சேரியில் வருகிற 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிமாநிலத்தவர் வர முற்றிலும் தடை. பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. துணை ராணுவம் வருகை. அனைத்து விதமான மதுபான கடைகள் செயல்பட தடை. ஆகவே 3 நாட்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளவும்’ என்று கூறப்பட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் வைரலான இந்த பதிவு புதுவை மக்கள் மத்தியில் பரபரப்பையும், அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. கலெக்டர் வல்லவனிடமும் இந்த தகவல்கள் சென்றன. இந்த வதந்தி பரப்பியவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.


இது குறித்து கலெக்டர் வல்லவன் கூறுகையில், “யாரோ விஷமிகள் இதுபோன்று தவறான தகவலை பரப்பியுள்ளனர். அதில் உள்ளவை அனைத்தும் வதந்திதான். ஜி20 மாநாடு நடக்கும் தினத்தன்று அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல் நடைபெறும். இதுபோன்ற தகவல்கள் வந்தால் பொதுமக்கள் யாரும் அதை நம்பவேண்டாம். மேலும், அந்த தகவலை யாருக்கும் அனுப்பவும் வேண்டாம். இந்த வதந்தியை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like