1. Home
  2. வர்த்தகம்

மக்களைத் தேடி ஐஸ்கிரீம்.. ஆவின் அதிரடி திட்டம்..!

மக்களைத் தேடி ஐஸ்கிரீம்.. ஆவின் அதிரடி திட்டம்..!

ஐஸ்கிரீம் விற்பனையை அதிகரிக்கும் வகையில், வரும் கோடைகாலத்தில் தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, சென்னை மற்றும்புறநகர் பகுதிகளைச் சேர்ந்த புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் ந.சுப்பையன் கூறியதாவது: “தள்ளுவண்டிகள் மூலம் ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்காக விற்பனையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன்மூலம், புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம்.


மக்கள் இருக்கும் இடத்துக்கு நேரடியாகச் சென்று, அவர்கள் விரும்பும்ஆவின் பொருட்களை வழங்க திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக, சென்னை மற்றும் புறநகரைச் சேர்ந்த 100 புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம். இந்த வாகனம் மூலமாக ஆவின் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய விரும்புவோர் ஆவின் நிர்வாகத்தை அணுகலாம்.

ஆவின் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை தள்ளுவண்டிகள் மூலமாக விற்பனை செய்ய விரும்புவோர், சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்கான சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். விற்பனைக்கு எடுக்கும் பொருட்களின் மதிப்பை முன்பணமாக செலுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்கள் ரூ.10 ஆயிரம் காப்புத் தொகை செலுத்த வேண்டும்.


மாதம் ரூ.30 ஆயிரத்துக்கு குறையாமல் ஐஸ்கிரீம் எடுத்து,விற்பனை செய்ய வேண்டும். விற்பனையாளர்களுக்கு லாபம் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வழங்கப்படும். வங்கிக் கணக்கு மற்றும் குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களுடன் 2 அரசு அலுவலர்களால் சான்றளிக்கப்பட்ட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஐஸ்கிரீம் விற்பனை செய்ய தேர்ந்தெடுக்கப்படும் பகுதிகள் மற்றும் இடங்கள் விண்ணப்பத்தில் முன்னதாகவே குறிப்பிட்டு அளிக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like