1. Home
  2. விளையாட்டு

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!


முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2022 - 2023-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் மாவட்டம், மண்டல அளவில் ஜனவரியில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.


இதற்காக https://sdat.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஏராளமானோர் பதிவு செய்துள்ளனர். இதில் வெற்றி பெறுவோருக்கு பரிசுத்தொகையாக ரூ.25 கோடி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த போட்டியில் சிலம்பம், கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட 15 விளையாட்டுகள் இடம்பெறுகிறது. மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகள், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த நிலையில், முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜனவரி 23-ம் தேதி) கடைசி நாள் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் புதிதாக கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட விளையாட்டு ஆணைய அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு விண்ணப்பிக்க ஜனவரி17 கடைசி தேதியாக இருந்த நிலையில் அது ஜனவரி 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விவரங்களையும் பதிவு செய்து போட்டிகளில் கலந்து கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like