1. Home
  2. தமிழ்நாடு

'ஈரோடு கிழக்கு தொகுதி' கைப்பற்ற தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி இடையே போட்டி..!!

'ஈரோடு கிழக்கு தொகுதி' கைப்பற்ற தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி இடையே போட்டி..!!

2008-ம் ஆண்டு முந்தைய தேர்தல் வரை ஒருங்கிணைந்த ஈரோடு தொகுதியாக இருந்தது. 2008-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது ஈரோடு தொகுதி 2 ஆக பிரிக்கப்பட்டு ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு தொகுதிகளாக உருவானது. தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் ஈரோடு தொகுதியாக இருந்தபோது தி.மு.க. 5 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பொது உடமை கட்சி 1 முறையும் வெற்றி பெற்று உள்ளது.

தொகுதி சீரமைப்புக்கு பின்பு ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த 2 தேர்தல்களிலும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெற்று உள்ளது. 2011-ல் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தே.மு.தி.க.வின் வி.சி.சந்திரகுமாரும், 2016-ல் அ.தி.மு.க.வின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசும் வெற்றி பெற்றனர்.

2011 தேர்தலில் தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி, தே.மு.தி.க. வேட்பாளரான வி.சி.சந்திரகுமாரிடம் தோல்வி அடைந்தார். 2016 தேர்தலில் அப்போதைய எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமார் தே.மு.தி.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்து களம் கண்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க.வின் கே.எஸ்.தென்னரசு 7,794 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா. 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். நாம்தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி 11 ஆயிரத்து 629 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் 10 ஆயிரத்து 5 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பெற்றனர். இந்த தேர்தலில் நோட்டாவுக்கு 1546 வாக்குகளும் அ.ம.மு.க. வேட்பாளர் முத்துகுமரனுக்கு 1204 வாக்குகளும் கிடைத்தது.

திருமகன் ஈ.வெ.ரா. மறைவால் தற்போது இந்த தொகுதிக்கு முதல் முறையாக இடைத்தேர்தல் நடக்கிறது. இது தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு நடைபெறும் 4-வது தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் கடந்த முறை 8 ஆயிரத்து 904 ஓட்டு வித்தியாசத்தில் திருமகன் ஈ.வெ.ரா. வெற்றி பெற்றார். இந்த நிலையில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுவதால் இந்த தொகுதியை பிடிக்க தி.மு.க.-அ.தி.மு.க. இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

Trending News

Latest News

You May Like