1. Home
  2. தமிழ்நாடு

திரிபுராவில் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் ஈரோட்டில் நல்லடக்கம்..!


ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (38). இவருடைய மனைவி நித்யா. இந்தத் தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகனும் 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். வடிவேல் இந்திய ராணுவத்தில் சேர்ந்து, திரிபுராவில் எல்லை பாதுகாப்புப் படை வீரராக பணியாற்றி வந்தார். தினமும் வடிவேல் தனது மனைவியுடன் போனில் பேசுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 2 நாட்கள் முன்பு வடிவேல் தனது மனைவியுடன் செல்போனில் பேசினார். அப்போது திரிபுராவில் கடும் குளிர் நிலவி வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட வடிவேல் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.


இதுகுறித்த தகவல் வடிவேல் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, வடிவேல் உடல் திரிபுராவிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு நேற்று (ஜன. 13ம் தேதி) காலை கொண்டுவரப்பட்டது. பின்னர், ராணுவ வாகனத்தில் அவரது உடல் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளிக்கு கொண்டுவரப்பட்டது.

அவரது உடலைப் பார்த்து மனைவி, குழந்தைகள், உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. அவருடைய உடலுக்கு ராணுவ வீரர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து வடிவேல் உடல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் உள்ள மின் மயானத்தில் ராணுவ வீரர்கள் மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

Trending News

Latest News

You May Like