1. Home
  2. தமிழ்நாடு

மகளிர் முகத்தில் உதயசூரியன்.. இதுதான் இந்த ஆட்சியின் சாதனை.. முதல்வர் பேச்சு..!

மகளிர் முகத்தில் உதயசூரியன்.. இதுதான் இந்த ஆட்சியின் சாதனை.. முதல்வர் பேச்சு..!

காலை சிற்றுண்டி உண்ணும் குழந்தைகள் முகத்தில், பஸ்சில் பயணம் செய்யும் மகளிர் முகத்தில் நித்தமும் காலையில் உதயசூரியன் உதிக்கிறதல்லவா, இதுதான் இந்த ஆட்சியின் மாபெரும் சாதனை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரைத்து வருகிறார். அதில், “பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி கொள்கைகளை செயல்படுத்துவதே திராவிட மாடல். சமூக நீதி தத்துவமே திராவிட இயக்கத்தின் அடிப்படை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, சமூக வளர்ச்சியும் அடங்கியது.


திராவிட மாடல் ஆட்சியின் பயணம் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. கவர்னர் பேச்சு குறித்து மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை. ஜனநாயக மாண்பை காக்க எனது சக்தியை மீறி செயல்படுவேன். கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் என்பதை நிரூபித்துக் காட்டிய தினம் ஜனவரி 9. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காக்கவும், ஆட்சியின் வலிமையை உணர்த்தவும் எனது சக்தியை மீறி செயல்படுவேன்.

சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சி வீரத்துடனும், விவேகத்துடன் நடைபெற்று வருகிறது என்பதை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய துணை கண்டமே இப்போது உணர்ந்துவிட்டது. மக்களின் நலன் மட்டுமே நமது சிந்தனையில் நின்றது, அதுவே மக்கள் மனதை வேன்றது; காலம் குறைவு, ஆனால் ஆற்றியுள்ள பணிகள் அதிகம்.

கடந்த ஓராண்டில் தமிழ்நாடு முழுவதும் 9 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். கடந்த ஓராண்டில் தமிழ்நாடு முழுவதும் 655 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நொடிக்கு நொடி உழைத்து வருகிறேன். ஒவ்விரு திட்டத்தின் முன்னேற்றத்தையும் நாள்தோறும் கண்காணித்து வருகிறேன். பொறுப்பு அதிகரிக்கும் போது ஓய்வு குறைகிறது.

தமிழ்நாடு அரசின் நலத்திட்டத்தால் 1.3 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். அரசு சார்பில் தமிழ்நாடு முழுவதும் 2.55 லட்சம் பணிகள் நடைபெற்று வருகின்றன. 10 ஆண்டுகளாக தேங்கி கிடந்த தமிழ்நாட்டை முன்னோக்கி ஓட வைத்துள்ளோம். சொன்னதை செய்ததால் வளர்ச்சி அடைந்துள்ளோம். சமூக வளர்ச்சி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் தகவல். மக்களின் மகிழ்ச்சியே திராவிட மாடலின் நோக்கம்.

கடந்த 15 மாதங்களில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எளிய மக்களின் பாராட்டுகள் என்னை ஊக்கமடைய செய்கின்றன. 2,892 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்தது சாதாரண விஷயமல்ல.

காலை சிற்றுண்டி உண்ணும் குழந்தைகள் முகத்தில், பஸ்சில் பயணம் செய்யக்கூடிய மகளிர் முகத்தில் நித்தமும் காலையில் உதயசூரியன் உதிக்கிறதல்லவா, இதுதான் இந்த ஆட்சியின் உடைய மாபெரும் சாதனை. தமிழ்நாட்டின் மதக்கலவரங்களோ, சாதிக்கலவரமோ, பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு என எதுவும் நடைபெறவில்லை. அரசின் நடவடிக்கையால் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்ந்து வருகிறது” என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like