குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்...!! ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு..!!
தமிழர் திருநாளான பொங்கல் விழாவையொட்டி ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், 2 கோடியே 19 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஆனால், பொங்கல் பரிசுடன் முழு கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும், கரும்பு விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து, 6 அடி நீளம் கொண்ட முழு கரும்பும் பொங்கல் பரிசுடன் கூடுதலாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக தமிழ்நாடு அரசு ரூ. 2,429 கோடி நிதியை ஒதுக்கியது. மொத்தம் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகளிலும் தடையில்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்துக்கு அருகே போர் நினைவுச்சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகர் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கிய முதல் நாளே சர்வர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யும் பணி முடங்கியது. தேனி, சிவகங்கை, திருவள்ளூர், திருச்சி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சர்வர் பிரச்னை காரணமாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிரமத்தை சந்தித்துள்ளனர். இதையடுத்து சாதரண முறையில் அவர்களின் ரேஷன் கார்டு எண்ணை குறித்து கொண்டு பொங்கல் தொகுப்பை வழங்க வட்டாட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இனி வரும் நாட்களில் இதுப்போன்ற சிரமங்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளப்படும் என்று உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.