தெலுங்கில் தள்ளிப்போனது ‘வாரிசு’ ரிலீஸ்..!

வம்சி இயக்கத்தில், விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஏற்கெனவே படத்தில் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படமும் அதேநாளில் வெளியாகவுள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது. மேலும், ‘வாரிசு’ படத்தின் முன்பதிவும் பல்வேறு திரையரங்குகளில் தொடங்கியவுடனேயே முடிவடைந்துவிட்டது.
இந்த நிலையில், ‘வாரிசு’ படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘வாரிசுடு’ ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார். அதேசமயம், தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படம் ஜனவரி 12-ம் தேதியும், சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ படம் ஜனவரி 13-ம் தேதியும் வெளியாக உள்ளது.