இந்தியாவில் பெண்கள் வாழ்வதற்கு மிகசிறந்த நகரம் எது தெரியுமா?
இந்தியாவிலேயே பெண்கள் வாழ்வதற்கான மிகசிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தை பிடித்திருக்கிறது.
இந்தியாவில் உள்ள 111 நகரங்களில் சமூகம், பாதுகாப்பு மற்றும் தொழில்துறையை உள்ளடக்கிய அளவுகளின் அடிப்படையில் பெண்களுக்கு உகந்த சூழல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள இந்திய நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், பெண்கள் வாழ்வதற்கான சிறந்த நகரமாக சென்னை முதலிடம் பெற்றுள்ளது.
சென்னைக்கு அடுத்ததாக புனே, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, அகமதாபாத், விசாகப்பட்டினம், கொல்கத்தா, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. 111 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு பட்டியலில், தமிழ்நாட்டில் உள்ள 8 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
தேசிய தலைநகரான டெல்லி, சென்னையை விட 30 புள்ளிகள் குறைவாக பெற்று 14வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. 10 லட்சத்துக்கும் கீழ் மக்கள் தொகை உள்ள இந்திய நகரங்களில், பெண்கள் வாழ்வதற்கான சிறந்த நகரமாக திருச்சி தேர்வாகியிருக்கிறது. இதில் அடுத்தடுத்த இடத்தில் வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், புதுச்சேரி, சிம்லா, மங்களூர், திருவனந்தபுரம் மற்றும் பெலகாவி ஆகிய நகரங்கள் உள்ளன.
பெண்களுக்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் உள்ள 2 பிரிவுகளிலும் முழுமையான வளர்ச்சியின் அடையாளமாக தமிழ்நாட்டில் உள்ள 8 நகரங்கள் இடம் பிடித்துள்ளது. அடிப்படை தேவைகள், பாதுகாப்பு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, குற்ற பதிவுகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட ஆதாரங்களின் தரவுகளை ஆய்வு செய்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
newstm.in