மெட்ரோ ரயிலில் கூலி தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதா..?
சென்னையில் கட்டட தொழிலாளர்களுக்கு மெட்ரோ ரயிலில் அனுமதி மறுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. சமூக ஊடகங்களிலும் இது தொடர்பாக கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், கட்டட வேலை செய்யும் கூலி தொழிலாளர்கள், சென்னை சென்ட்ரலில் இருந்து நந்தனம் செல்லவிருந்த நிலையில், அவர்கள் சென்னை மெட்ரோ ரயிலில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
கடப்பாறை உள்ளிட்ட கூர்மையான கருவிகளை தொழிலாளர்கள் வைத்திருந்தனர். பாதுகாப்பு விதிமுறைகளின்படி கூர்மையான கருவிகளின் முனைகள் மூடப்பட்ட பிறகு, அவர்கள் ரயிலில் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.