நீலகிரியில் கொள்ளையர் மீது துப்பாக்கிச்சூடு!!

நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க முயன்ற நபரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூர் அருகே குந்தலாடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இன்று அதிகாலை இரண்டு பேர் கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர். அப்போது, போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது, இருவரும் கத்தியால் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை எச்சரிக்க வானத்தை நோக்கி இரண்டு முறை சுட்டனர். ஆனாலும் அவர்கள் சரணடையாததால், போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஒரு கொள்ளையன் தப்பிச் சென்ற நிலையில், மற்றொரு கொள்ளையன் தொடையில் குண்டு பாய்ந்தது.

காயம் அடைந்த கொள்ளையன் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெட்டு காயம் அடைந்த இரண்டு போலீசாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பிச் சென்ற மற்றொரு கொள்ளையனை போலீஸார் தேடி வருகின்றனர்.
தற்போது கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவர் மீதும் கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிகாலை நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
newstm.in