குட் நியூஸ்..! திருப்பதி கோவிலில் இனி வரிசையில் காத்திருக்க வேண்டாம் ..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் பல மணி நேரங்கள் கூட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்காமல் டிக்கெட் பெறுவதற்கான புதிய சேவையை தேவஸ்தானம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி திருமலை விஐபி பிரேக் தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் ஆன்லைனில் வாங்க தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடைமுறையை தேவஸ்தான நிர்வாகம் ஏற்கனவே சோதனை முறையில் செயல்படுத்தி வருகிறது. தற்போது வரை 34 கவுன்டரில் டிக்கெட் எடுக்க பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் வகையில் தேவஸ்தான நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
அதன்படி சிபாரிசு கடிதங்களைச் சமர்ப்பித்த பக்தர்களின் மொபைல் எண்ணுக்கு செய்தி அனுப்பப்படும் என்றும் அந்த லிங்கை பக்தர்கள் கிளிக் செய்தால் பணம் செலுத்துவதற்கன ஆப்ஷன் தோன்றும். இதையடுத்து ஆன்லைனில் பணத்தை செலுத்திவிட்டு டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.
தேவஸ்தானம் இந்த புதிய முறையை இரண்டு நாட்களாக சோதனை முறையில் செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த புதிய கொள்கை குறித்து பக்தர்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து தேவஸ்தான நிர்வாகம் விரைவில் இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.