இன்று மாலைக்குள்... அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு ..!

தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விபரங்களை இன்று (15-11-2023) மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்யுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறுவதற்கு தடைகோரிய வழக்கு, வாதம் முடிவடைந்து தீர்ப்புக்காக சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
இந்த வழக்கின் போது, கடந்த 2019ம் ஆண்டு முதல் 2023 செப்டம்பர் 30 வரை தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நன்கொடை விவரங்களை சேகரிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று கண்டித்த சுப்ரீம் கோர்ட், நன்கொடை விவரங்களை உடனடியாக தாக்கல் செய்யுமாறு ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.
அந்த கடிதத்தில், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்களின் முழு விவரங்களை இன்றைய தினத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். பத்திர நன்கொடை அறிமுகமான 2018 ஆம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
நன்கொடை அளித்த நபர், நிறுவனங்களின் விபரங்கள், தேதி, எந்த வங்கி கணக்கில் பத்திரங்கள் பணமாக்கப்பட்டன, மொத்த தொகை என்ன? என்பன போன்ற அனைத்து விவரங்களையும் சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.