1. Home
  2. தமிழ்நாடு

இனி வரும் காலங்களில் இதுபோன்ற புகார்கள் வராமல் செயல்பட ஓட்டுநர், நடத்துநர்களுக்கு உத்தரவு..!

இனி வரும் காலங்களில் இதுபோன்ற புகார்கள் வராமல் செயல்பட ஓட்டுநர், நடத்துநர்களுக்கு உத்தரவு..!

அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் போது அந்த பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர்களால் அவமரியாதை செய்யப்படுவதாக புகார்கள் வருகிறது. இந்த அவமரியாதை தொடர்பாக ஓய்வு பெற்ற போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குநருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதையடுத்து அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் ஓய்வு பெற்ற பணியாளர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பொதுமேலாளர் கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ''அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்கள் நமது பேருந்துகளில் பயணம் செய்யும்போது உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி ஏற்றி விடுவதில்லை எனவும், ஓய்வு பெற்ற பணியாளர்களை பயணத்தின்போது சில நடத்துநர்கள் அவமரியாதை செய்வதாகவும் கடிதம் வந்துள்ளது.

இதனால், பேருந்துகளில் பயணம் செய்யும் ஓய்வு பெற்ற பணியாளர்களை கண்ணியத்துடன் நடத்திடவும், அவர்களை உரிய பேருந்து நிறுத்தத்தில் ஏற்றி, இறக்கி செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் செயல்பட வேண்டும் என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மீண்டும் இதுபோன்ற புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like