அமெரிக்காவில் காணமல் போன இந்திய பெண் குறித்து தகவல் அளித்தால் 10 ஆயிரம் டாலர் பரிசுத்தொகை..!

குஜராத்தை சேர்ந்தவர் மயூஷி பகத் (29). இவர், கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு எப்1 மாணவர் விசாவில் சென்றிருக்கிறார். அங்கு அவர் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படித்து வந்தார். அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி அங்கு இருந்து வெளியேறி இருக்கிறார்.
அதற்கு பிறகு அவரை காணவில்லை. அவரது குடும்பத்தினர் 2019 மே 1-ம் தேதி, இது குறித்து புகார் அளித்து இருக்கின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க புலனாய்வு மையம், காணாமல் போனவர்கள் பட்டியலில் மயூஷி பெயரை சேர்த்து இருக்கின்றது.
கருமையான முடி, காபி நிற கண்கள், கொண்ட மயூஷி பகத் 5 அடி 10 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், அவர் காணாமல் போன போது கருப்பு நிற டி-ஷர்ட்டும், பல வண்ணங்கள் கொண்ட பைஜாமா பேன்ட் அணிந்து இருந்தார் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பு, மயூஷி பகத் இருப்பிடம் குறித்து தகவல் அளித்தால் அவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 8.33 லட்சம் ஆகும்.