உலகக் கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகல்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
8-வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கவுள்ள இந்தத்தொடரில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கின்றன.
இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த மாதத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அணியை ரோகித் சர்மா வழிநடத்தவுள்ளார். துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் வேகப்பந்து வீச்சு வரிசையை புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்களுடன் இணைந்து ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முதுகு எலும்பு முறிவு காயத்தால் அவதிப்பட்டு வரும் அவருக்கு சுமார் 6 மாதங்களுக்கு ஓய்வு தேவை என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசியுள்ள பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி, 'பும்ரா டி20 உலகக் கோப்பை போட்டியில் நிச்சயம் விளையாடப் போவதில்லை. அவருக்கு முதுகு எலும்பு முறிவு காயம் உள்ளது. அதனால் அவர் ஆறு மாதங்களுக்கு வெளியே இருக்கக்கூடும்' என்று அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளில் விளையாடிய பும்ரா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் தொடக்க ஆட்டத்தில் அணியுடன் திருவனந்தபுரத்திற்கு செல்லவில்லை. நிர்வாகத்திடம் இருந்து போதுமான ஓய்வு அளிக்கப்பட்ட போதிலும், பும்ராவின் காயம் அவரது பணிச்சுமையைக் கையாள்வதைப் பொருத்தவரை பெரிய எதிர்மறையாக இருந்து வருகிறது.
பும்ரா சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டார். இதனால் அவர் கணிசமான காலத்திற்கு அணியில் இடம் பெறாமல் இருந்தார். தற்போது அவர் மீண்டும் அதே பிரச்னையை எதிர்கொண்டு, டி20 உலககோப்பை தொடரில் இருந்து விலக இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.