பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் நடுவர் ஆசத் ரவுஃப் காலமானார்..!!

2000-ம் ஆண்டில் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் நடுவராக இருந்தார் ஆசத் ரவுஃப் (66). சுமார் 16 ஆண்டுகளாக ஆசத் ரவுஃப் நடவராக பணியாற்றினார். அதற்கு முன்பு பாகிஸ்தான் முதல்தர கிரிக்கெட்டில் நடுவரிசை பேட்டராக விளையாடினார்.
இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 64 டெஸ்ட் போட்டி, 139 ஒருநாள் போட்டி, 28 டி20 போட்டியில் ஆசத் ரவுஃப் நடுவராக பணியாற்றினார். கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடைபெற்ற சூதாட்ட புகாரில் ஆசத் ரவுஃப் முக்கிய குற்றவாளியாக மும்பை போலீசாரில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து, ஐபிஎல் தொடர் முடிவதற்குள்ளே ஆசத் ரவுஃப் தனது நாட்டிற்கு சென்றுவிட்டார்.
அதன் பிறகு ஐசிசி எலைட் நடுவர்கள் பிரிவிலிருந்து ஆசத் ரவுஃப் நீக்கப்பட்டார். தாம் எவ்வித சூதாட்டத்தில் தொடர்பில்லை என்று கூறிய ஆசத் ரவுஃப், விசாரணைக்கு ஒத்துழைப்பதாக அறிவித்தார். ஆனால், ஆசத் ரவுஃப் குற்றவாளி என அறிவித்த பிசிசிஐ, அவருக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகிய ஆசத் ரவுஃப், லாகூரில் செருப்பு மற்றும் ஷூ கடையை நடத்தி வந்தார். அண்மையில் கூட அவர் ஷூ விற்பனையாளராக கஷ்டப்படும் காட்சிகள் வெளியானது. இந்நிலையில், நேற்று கடையை மூடிவிட்டு வீடு சென்ற ஆசத் ரவுஃப்க்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். ஆசத் ரவுஃப் மறைவுக்கு ரசிகர்களும், கிரிக்கெட் உலகமும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.