கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்... கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்ற சிஎஸ்கே...!

ஐபிஎல்2019 கோப்பையை வேண்டுமானால் மும்பை இந்தியன்ஸ் வென்றிருக்கலாம். ஆனால், தங்களின் போராட்ட குணம் கொண்ட ஆட்டத்தால், கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை கொள்ளைக் கொண்டது வழக்கம்போல் சென்னை சூப்பர் கிங்ஸ் தான்.
 | 

கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்... கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்ற சிஎஸ்கே...!

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன என்றாலே, ஆட்டத்தில் அனல் பறக்கும், போட்டியில் பரபரப்பு பற்றிக் கொள்ளும் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால், ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி, தங்களின் இதயத்துடிப்பை இந்த அளவுக்கு எகிற செய்யும் என்று, சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகளின் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் தான்.

ஐயா...சாமி...யாராவது 108 ஆம்புலன்ஸுக்கு ஃபோன் பண்ணுங்கையா... என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஸ்டேட்டஸ் போடும் அளவுக்கு ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் பரபரப்பு பற்றிக் கொண்டது. 

டாஸ் வென்று மும்பை அணி பேட்டிங் செய்ய தொடங்கியதும், "பவர் பிளே" ஓவர்களான முதல் ஆறு ஓவர்களில் டி காக்கும், ரோஹித் சர்மாவும் அதிரடியாக ஆடியபோது, மும்பை அணி 180 -200 ரன்கள் கூட அடிக்கலாம் என்று தான் கணிக்கப்பட்டது.

ஆனால், டி -காக், ரோஹித் சர்மா அடுத்தடுத்து பெவிலியன் திரும்பவே, ஜெட் வேகத்தில் ஏறி கொண்டிருந்த ரன் ரேட்,  சட்டென சரிந்தது. அடுத்த வந்த சூர்யகுமார் யாதவ்,  இஷான் கிஷன், க்ருணால் பாண்டியா என யாரையும் நிலைத்து ஆட விடாமல், அவர்களின் விக்கெட்களை சீரான இடைவெளியில் வீழ்த்தி, மும்பை அணியை நிலைக்குலைய செய்தனர் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள்.

கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்... கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்ற சிஎஸ்கே...!

மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஹர்த்தி பாண்டியாவும் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் பெவிலியன் திரும்ப, அனுபவ ஆட்டக்காரரான போலார்டு மட்டும் கடைசி வரை போராடி, அதிகபட்சமாக 45 ரன்கள் சேர்த்தார். ஹர்பஜன் சிங், இம்ரான் தாகிர், பிராவோ ஆகியோரின் வழக்கமான சிறப்பான பந்துவீச்சால், மும்பை அணி 149 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

150 ரன்கள் வெற்றி இலக்கு என்பது சிஎஸ்கேவுக்கு ஜுஜிபி தான். வாட்சனும், டுபிளஸ்சியும் அப்படிதான் ஆட்டத்தை ஆரம்பித்தனர். பவுண்டரியுடன் தன் கணக்கை தொடங்கிய டுப்ளஸி, தொடர்ந்து அதிரடியாக ஆட, மறுமுனையில் வாட்சன் தனது பொறுப்பான  ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
நல்லாதானே போயிட்டிருக்கு ஏன்? எனக் கேட்கும்படி, டூப்ளஸி அவுட் ஆனதும், காற்று மும்பை அணி பக்கம் வீசத் தொடங்கியது. சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழவே, சிஎஸ்கேவுக்கு நெருக்கடி ஆரம்பித்தது.

அப்போது தான் எப்போதும் போல "தல" தோனி களமிறங்கினார்.  இரண்டு ரன்களே எடுத்திருந்த நிலையில், துரதிருஷ்டமாக ரன்- அவுட் ஆகி வெளியேறினார் தோனி. இஷான்  கிஷன் டெரக்ட் ஹிட்டாக பந்தை ஸ்டெம்புக்கு அடிக்க, அப்போது ஒரு கோணத்தில் பார்த்தபோது தோனி நூலிழையில் கிரீஸுக்கு உள்ளே தான் இருந்தார். 
இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் பேட்ஸ்மேனுக்கு சாதகமாகவே நடுவரின் முடிவு  இருக்கும். ஆனால், நேற்று மூன்றாவது அம்பயர் தோனிக்கு அவுட் கொடுத்து, சிஎஸ்கேவுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்... கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்ற சிஎஸ்கே...!

சரி.. தல போனால் என்ன? சிங்கம் நான் இருக்குறேன் என, ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் தமது ருத்ரதாண்டவத்தை காட்ட தொடங்கினார் வாட்சன். மலிங்கா வீச 16 -ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், மூன்று பவுண்டரிகள் என மொத்தம் 20 ரன்களை விளாசினார். இதேபோன்று, க்ருணால் பாண்டியா வீச 18 ஓவரில், வாட்சன் மூன்று சிக்ஸர்களை தெறிக்கவிட, சிஎஸ்கே வெற்றிப் பெற இரண்டு ஓவர்களில் இன்னும் 19 ரன்களே தேவைப்பட்டது. பும்ரா வீசிய 19 -வது ஓவரில் 10 ரன்கள் எடுத்த நிலையில், கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவை.

வாட்சன் ஒரு சிக்ஸர்களை விளாசினார் போதும்...  மும்பை அணியின் ஆட்டம் முடிந்துவிடும்... கடைசி ஓவரை அனேகமாக ஹர்திக் பாண்டியா தான் வீசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடினமான  அந்தப் பொறுப்பு மலிங்கா வசம் தரப்பட்டது. அவர் வீசிய நான்காவது பந்தில் ஒரு ரன் எடுத்திருந்தாலே போதும் என்ற நிலையில்,  இரண்டாவது ரன் எடுக்க ஆசைப்பட்டு, வாட்சன் ரன் -அவுட் ஆகவே, சிஎஸ்கே ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிற ஆரம்பித்துவிட்டது. 

2 பந்துகளில் இன்னும்  4 ரன்கள் தேவை. புதிதாக களமிறங்கிய தாக்கூர், இரண்டு ரன்கள் அடிக்க, கடைசிப் பந்தில் இன்னும் இரண்டு ரன்கள் அடித்தால் சிஎஸ்கே வெற்றி... விக்கெட் விழுந்தால் மும்பை அணி வெற்றி... ஒரு ரன் எடுத்தால் ஆட்டம் டிரா... என்ன நடக்குமோ என, திகில் பட கிளைமாக்ஸை போல், ஒட்டுமொத்த  சிஎஸ்கே, மும்பை ரசிகர்களும் நகத்தை  கடித்தப்படி, மைதானத்தை நோக்கிக் கொண்டிருக்க, மலிங்கா வீச கடைசிப் பந்தில் தாக்கூர் எல்பிடபள்யு முறையில் அவுட் ஆக, ஃபைனலில் த்ரில் வெற்றிப் பெற்றது மும்பை இந்தியன்ஸ்.

கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்... கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்ற சிஎஸ்கே...!

சிஎஸ்கேவுக்காக தனியொருவனாய் கடைசி வரை போராடி 59 பந்துகளில் 80 ரன் விளாசிய வாட்சனும்,  4 ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தி, மும்பை அணியின் வெற்றிக்கு வித்திட்ட பும்ராவும் நேற்றைய ஆட்டத்தின் நாயகர்களாக ஜொலித்தனர்.

ஐபிஎல்2019 கோப்பையை வேண்டுமானால் மும்பை இந்தியன்ஸ் வென்றிருக்கலாம். ஆனால், தங்களின் போராட்ட குணம் கொண்ட ஆட்டத்தால், கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை கொள்ளைக் கொண்டது வழக்கம்போல் சென்னை சூப்பர் கிங்ஸ் தான்.

வி.இராமசுந்தரம் -

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP