வைகுண்டம் எங்கே இருக்கிறது ?
பாகவதர் ஒருவர் கஜேந்திர மோட்சம் பற்றி சுவாரஸ்யமாக விவரித்துக் கொண்டிருந்தார்.“கஜேந்திரன் என்னும் யானை தாமரைத் தடாகத்தில் மலர் பறிக்க வந்தது. குளத்தில் இருந்த கூகு என்ற முதலை, யானையின் காலினை இழுத்தது. முதலையின் வாயில் சிக்கிக் கொண்ட யானை, செய்வதறியாது திகைத்தது. தான் வழிபடும் பெருமாளே கதி என்று நினைத்து “ஆதிமூலமே” என்று அபயக்குரல் எழுப்பியது. குரலைக் கேட்ட பெருமாள் வைகுண்டத்திலிருந்து கருடன் மீது பறந்து வந்து கஜேந்திரனைக் காப்பாற்றினார்,'' என்று சொல்லிக்கொண்டிருந்த போது, உபன்யாசத்துக்கு வந்திருந்த பெரியவர் ஒருவர் இடைமறித்தார்.
“பாகவதரே! யானையின் கூக்குரல் வைகுண்டம் வரை எப்படி கேட்கும்? அதைக்கேட்டாலும் கூட பெருமாள் உடனே எப்படி அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்?'' என்றார்.நிகழ்ச்சியை விவரித்துக் கொண்டிருந்த பாகவதருக்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஏதோ படித்ததையும், கேட்டதையும் கொண்டு கதை சொன்னவர் விழிக்க ஆரம்பித்து விட்டார். உடனே பாகவதரின் மகன் எழுந்தான்.
“ஐயா! உங்கள் கேள்விக்கு பதில் நான் சொல்கிறேன்,'' என்றான். சிறுவனின் பதிலைக் கேட்க அனைவரும் ஆர்வமாயினர்.“மக்களே! வைகுண்டம் என்பது எங்கோ வானத்தில் இல்லை. அவரவர் இருக்குமிடமே வைகுண்டம் தான். அதாவது கூப்பிடு தூரத்தில் வைகுண்டம் இருக்கிறது. பரம்பொருள் எங்கும் நிறைந்திருக்கிறான். நம்பிக்கையோடு அழைத்தால் அவன் உடனே ஓடி வருவான், '' என்றான். அனைவரும் இந்த பதில் கேட்டு கைதட்டினர்.
நம்பிக்கையே பக்தி என்ற உண்மையை அந்த சிறுவன் வாயிலாக இறைவன் அவர்களுக்கு உணர்த்தினார்.நமக்கும் தான் ....