நாளை ஆடி செவ்வாய் : அவ்வையார் விரதம் கடைபிடியுங்கள்..!
ஆடி மாதம் அம்மன் தவம் செய்த மாதம் என்பதால் இந்த மாதங்களில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் பல பூஜைகள் அம்மன் சந்நிதிகளில் நடைபெறுவது வழக்கம். இதைபோல், ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் தினத்தில் பெண்கள் பலர் ஒன்றுகூடி வீடுகளில் மாலை நேரங்களில் ஒரு பூஜை செய்து அம்மனுக்குக் கொழுக்கட்டை படைப்பார்கள். இந்த பூஜையை காலங்காலமாய் விரதம் மேற்கொண்டு பூஜை செய்வது முன்னோர்களின் ஐதீகம். இந்தக் கொழுக்கட்டை செய்வதை ஆண்கள் பார்க்கக்கூடாது என்றும் அதனை மீறி பார்த்தால் தடங்கல் நேர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு இதனை சிறப்பாக செய்வார்கள்.
ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் அவ்வையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு.
கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிப்பார்கள்.
செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும். ஆடி செவ்வாய்கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட 48 மடங்கு அதிக பலன் கிடைக்கும் என்பது ஒருவித நம்பிக்கை. இந்த தானத்தில் அனைத்துவித காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து சமைத்த சோறு கொடுப்பது மிக மிக நன்று.
ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும், அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சமடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். அதிகாலை எழுந்து குளித்து சிவப்பு நிற ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்குச் சென்று, செந்நிற மலர் அல்லது செண்பக மலர்களால் அர்ச்சனை செய்யவேண்டும். நிவேதனத்திற்குச் செந்நிறக் கனிகளே உகந்தது. காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபடவேண்டும்.