1. Home
  2. ஆன்மீகம்

இன்று அமாவாசை : அமாவாசை நாளில் செய்யக்கூடாதவை..!

1

பல சிறப்புகள் கொண்ட வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் முன்னோரை வழிபட்டால் சுபிட்சம் கிடைக்கும். இந்துக்களுடைய வழிபாட்டு நாட்களில் முக்கியத்துவம் வாய்ந்தது அமாவாசை. இந்நாளில் முன்னோர் வழிபாடு, பித்ரு கடன் போன்றவை ஏற்ற நாளாகும். முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். 

வருடத்தில் எந்த வழிபாட்டை வேண்டுமானாலும் செய்யாமல் இருக்கலாம். ஆனால் முன்னோர் வழிபாட்டை மட்டும் ஒருபோதும் செய்யாமல் இருக்கக் கூடாது என்று ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது. மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை. அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு அவர்களின் ஆசி பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும். இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும். எனவே நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. அப்படி கொடுக்க முடியாதவர்கள் சூரியன் மறைவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை கூற வேண்டும்.

அமாவாசை நாளில், யாரெல்லாம் பித்ருக்கள் என்று சொல்லப்படும் முன்னோர்களை, பெற்றோர்களை முறையே வழிபட்டு வணங்கி ஆராதிக்கிறார்களோ, அதனால் கிடைக்கும் பலன்கள் மொத்தமும் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் பிள்ளைகளுக்கும் போய்ச் சேரும் என்று தர்மசாஸ்திரம் நமக்கு அறிவுறுத்துகிறது. அமாவாசை நாளில், பெற்றோர் இல்லாத கணவன் விரதமிருக்கலாம். அதேசமயம், கணவன் விரதம் இருக்கிறாரே, சாப்பிடாமல் இருக்கிறாரே என்று மனைவியும் விரதம் இருக்கக் கூடாது. கணவன் இருக்கும் போது அவர்களை சுமங்கலிகள் என்று சொல்வார்கள். சுமங்கலிகள் ஒருபோதும் அமாவாசை நாளில் விரதம் இருக்கக் கூடாது. ஆகவே, மனைவியானவள், விரதம் இருக்காமல் சாப்பிடவேண்டும். இன்னொரு விஷயம்... அமாவாசை விரத நாளில், விரதப் படையலாக, மாமனார், மாமியாருக்காகச் சமைக்கும் உணவை வெறும் வயிற்றுடன் சமைக்கக்கூடாது என்றும் காலை உணவை எடுத்துக் கொண்ட பிறகுதான் சமைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமாவாசை நாளில் செய்யக்கூடாதவை

  • இந்த நாளில் எந்த ஒரு நல்ல காரியமும் செய்யக்கூடாது
  • துளசி இலையை பறிக்கக் கூடாது
  • இந்த நாளில் இறைச்சி, முட்டை, மீன், வெங்காயம், பூண்டு உண்ணக் கூடாது
  • நீண்ட தூரம் பயணம் கூடாது
  • வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது
  • வீட்டில் சண்டை சச்சரவுகள் கூடாது
  • கடுமையான சொற்களை பயன்படுத்தக்கூடாது
  • சந்திர காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்
  • 21 முறை மூக்கின் இடது நாசி வழியாக சுவாசிக்கவும். அப்போது வலது மூக்கை மூடிக் கொள்ள வேண்டும். இடது காலை முதலில் எடுத்து வைத்து வெளியில் செல்ல வேண்டும்.

Trending News

Latest News

You May Like