1. Home
  2. ஆன்மீகம்

இன்று ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத் திருநாள்..!

1

விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒருவர் கிருஷ்ணர். அன்றைய தினம் நம் வீட்டு செல்லப் பிள்ளையாக வலம் வருகிறார். இந்த குதுகல கொண்டாட்டம் நமது இந்து மதத்தின் தனிச்சிறப்பு.

அஷ்டமி திதியில் அவதாரம் செய்ததால் ஜென்மாஷ்டமி- பெயரிலேயே அஷ்டமி உள்ளது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர், கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதியில் ஆவணி மாதம் பிறந்தவர். 

கிருஷ்ண அவதார வரலாறு 

பாகவத புராணத்தின் 10 வது அத்யாயம் கிருஷ்ணாவதாரத்தை பற்றியது.  கிருஷ்ணர் பிறந்த நேரம் கம்சன் என்னும் கொடுங்கோலன் மதுராவை ஆட்சி புரிந்த நேரம். அவனது சகோதரி தேவகியின் குழந்தையே கிருஷ்ணர் என்பது நாம் அறிந்ததே. தேவகிக்கும் வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும் என்பது அசரீரி வாக்கு.

இந்த அசரீரி வாக்கினால் சினம் கொண்ட கம்சன் தேவகி வசுதேவரை சிறையில் அடைத்தான். அவர்களின் ஆறு ஆண் குழந்தைகளை கொன்றான்.  ஏழாவது குழந்தை வசுதேவரின் நண்பரும் யாதவ குலத்தலைவருமான வசுதேவர் இரண்டாவது மனைவி ரோஹிணியின் கர்பத்தில் போய் தங்கியது. அவரே பலராமன். கிருஷ்ணர் தேவகி வசுதேவரின் எட்டாவது  மகனாகப் பிறந்தார்.

கும்மிருட்டு கூடிய நள்ளிரவு..அப்போது தேவகி நந்தன் தனது தாயின் வயிற்றிலிருந்து ஒரு முழு நிலவு கிழக்கு வானத்திலிருந்து  தோன்றுவது போல் வெளி வந்தார்.வசுதேவர் அந்த அற்புத குழந்தை நான்கு கரங்கள் கொண்டவராக சங்கு, சக்ரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றை நான்கு கைகளிலும் தரித்தவராக,  மார்பில் ஸ்ரீவத்சம் உடையவராக, கழுத்தில் கௌஸ்துப மணி கொண்டவராக, தங்க நிற ஆடை அணிந்து, நீல நிற மேகம் போல் விளங்குவதை கண்டார்.

அவரது அடர்த்தியான கூந்தல் நவரத்தினங்கள்  பதித்த கிரீடம் மற்றும் ஆபரணங்களுக்கும் நடுவில் பொலிந்து கொண்டிருப்பதை கண்டார். இடுப்பிலும் தோள்களிலும் பொலிவு மிகுந்த ஆபரணங்கள் அலங்கரிப்பதை கண்டார்குழந்தை பிறந்த நேரம் நடுநிசி.அடர் மழை.வசுதேவர் குழந்தையை தனது நண்பர் நந்தகோபர் இருப்பிடத்திற்கு எடுத்து சென்று குழந்தையை காக்க நினைத்தார். பிறந்தது கடவுள் என்றாலும் தந்தை மனம் பித்து கொண்டு தானே இருக்கும்.கடக்க வேண்டியது யமுனை ஆற்றை. ஆறோ கரை புரண்டு ஓடியது. ஒரு கூடையில் குழந்தையை எடுத்துக்  கொண்டு வசுதேவர் பயணிக்க, யமுனை வழி விட, ஆதிசேஷன் குடைபிடிக்க, எம்பெருமான் நந்தகோபர் இல்லம் வந்து சேர்ந்தார். குட்டிக் கண்ணன் பிறந்த அந்த நாளை தான் நாம் ஸ்ரீகிருஷ்ணஜெயந்தியாக கொண்டாடுகிறோம். 

மக்களை மேம்படுத்த -  துயர் துடைக்க மிகப்பெரும் பொக்கிஷம் கீதையை கொடுத்த நாயகன் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத் திருநாளை கொண்டாடுவோம்.நமது வாழ்க்கையில் அக - புற இருள் நீங்கி பெரு மகிழ்ச்சி ஒளி வெள்ளம் பாயும்.

சர்வம் கிருஷ்ணார்பணம்.

Trending News

Latest News

You May Like