இன்று மகாளய அமாவாசை..! யாருக்கு பாதிப்பு வரும்? யார் பரிகாரம் செய்யணும் ?
2024ம் ஆண்டிற்கான மகாளய அமாவாசை அக்டோபர் 02ம் தேதி புதன்கிழமை வருகிறது. வருடத்தின் மிக முக்கியமான அமாவாசை இதுவாகும். இதுவரை வாழ்நாளில் முன்னோர்களை வழிபட்டதே கிடையாது என்பவர்களுக்கு கூட அவர்களுக்கு இருக்கும் பித்ருதோஷத்தை போக்கி, முன்னோர்களின் ஆசியை பெற்றுத் தரக் கூடிய அற்புதமான அமாவாசை மகாளய அமாவாசை ஆகும். அதனால் இந்த நாளில் கண்டிப்பாக முன்னோர்களை வழிபட்டு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
அக்டோபர் 01ம் தேதி இரவு 10.35 மணி துவங்கி, அக்டோபர் 03ம் தேதி அதிகாலை 12.34 வரை அமாவாசை திதி உள்ளது. அதனால் இது சர்வ அமாவாசையாக கருதப்படுகிறது.
எந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுப்பது? கிரகணத்தால் யாருக்கு பாதிப்பு ஏற்படும்? பாதிப்பு நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
அக்டோபர் 02ம் தேதி இரவு 09.13 மணிக்கு துவங்கி, அக்டோபர் 03ம் தேதி காலை 03.17 வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளதாக சொல்லப்படுகிறது. கடைசி 7 நிமிடங்கள் 25 விநாடிகள் கிரகணம் உச்சத்தில் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கிரகணம் இந்தியாவின் எந்த பகுதியில் தெரியாது என்பதால் கிரகணத்தால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. தெற்கு அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும் என அறிவியலாளர்கள் கூறி உள்ளனர். அதனால் மகாளய அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவதற்கும், தர்ப்பணம் கொடுப்பதற்கும் எந்த தடையும் கிடையாது.
அதே சமயம் மகாளய அமாவாசை அன்று, சூரியன், சந்திரன், கேது, புதன் ஆகிய கிரகங்களும் கன்னி ராசியில் ஒன்று சேர்வதாக அமைந்துள்ளது. சந்திரன், கன்னி ராசியில் அஸ்தம் நட்சத்திரத்தில் நுழைவதாக அமைந்துள்ளதால் கன்னி ராசிக்காரர்களுக்கு இது உடல்நிலையில் சிறிய பாதிப்புக்களை ஏற்படுத்தும். அதனால் கன்னி ராசிக்காரர்கள் மட்டும் மகாளய அமாவாசை அன்று, அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று விடலை தேங்காய் விட்டு வழிபடுவது சிறப்பு. அல்லது மட்டை தேங்காய், அரிசி ஆகியவற்றை கோவில் அர்ச்சகர் அல்லது வேறு யாருக்காவது தானமாக அளிப்பது மிக சிறப்பானதாகும்.
மகாளய அமாவாசை அன்று செய்யப்படும் தானங்களில் மிகவும் சிறந்தது அன்னதானம். இந்த நாளில் வீட்டில் செய்தோ அல்லது கடையில் வாங்கியோ யாராவது இரண்டு பேருக்காவது அன்னதானம் வழங்குவது சிறப்பு. இது தவிர அரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், தட்சணை, வஸ்திரம் ஆகிய ஐந்து பொருட்களையும் அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் தானமாக வழங்குவது மிகவும் சிறப்பான பலன்களை தரும். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதுடன், இந்த தானங்களையும் செய்வதால் முன்னோர்களின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.
சூரிய கிரகணத்திற்கும், இந்தியாவிற்கும் இந்த முறை தொடர்பு கிடையாது என்பதால், இந்தியாவில் வசிப்பவர்கள் தாராளமாக வழக்கம் போல் முன்னோர்களின் வழிபாட்டினை செய்யலாம். தர்ப்பணம் கொடுக்கலாம். பொதுவாக கிரகணம் என்பது முன்னோர்கள் வழிபாட்டிற்கு மிகவும் ஏற்ற நாளாகவே கருதப்படுகிறது. இதனால் கிரகணத்தன்று மகாளய அமாவாசை வழிபாட்டினை செய்து, தானங்கள் அளிப்பது மிகவும் சிறப்பானதாகும். குறிப்பாக காகம் போன்ற உயிரினங்களுக்கும், தெரு ஓரங்களில் வசிப்பவர்களுக்கு அவர்களுக்கு தேவையான உணவு போன்றவற்றை தானமாக அளித்து, வேண்டிய உதவிகளை செய்வதால் பித்ருக்களின் மனம் மகிழும் என்பது ஐதீகம்.