1. Home
  2. ஆன்மீகம்

குழந்தை பெற போகிறவர்கள் ஒரு முறை இந்த ஆலயத்திற்கு சென்று வாருங்கள்..! "கருவைக் காத்தருளும் திருக்கருகாவூர் அம்மன்"..!

1

ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது என்று குறிப்பிடப்படுகிறது. திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடியை) தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கருவை, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது.

இந்த ஆலயத்தில் கிழக்கு பார்த்தபடி ராஜகோபுரமும், தெற்கில் நுழைவு வாசலும் உள்ளன. உள்ளே நுழைந்ததும் தென்புறமும், பின்புறமும் நந்தவனங்களும், வடக்கே வசந்த மண்டபமும் காணப்படுகின்றன. சுவாமி கோவிலுக்கு முன்புறம் கொடிமரம், பலிபீடம், நந்தி இருக்கின்றன.


திருமணமாகி பல ஆண்டு களாகியும் கருத்தரிக்காதவர்கள், கருத்தரித்தாலும் உடனுக்குடன் அது தங்காமல் சிதைந்து போவது, தாய்க்கும், குழந்தைக்கும் பிரச்சினை ஏற்படுவது.. இப்படி எத்தனையோ உள்ளன. நீங்கள் செல்ல வேண்டிய ஸ்தலம் இது தான். திருக்கருகாவூர் கருக்காத்த நாயகி அம்மன் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்.குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து, அம்பிகையில் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை, 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு என்ற நம்பிக்கையில் தமிழகம் மட்டுமல்லாது வேறு மாநில மக்களும் தொடர்ந்து வந்துபோகிறார்கள். 

அதே போல கருவுற்ற பெண்கள் சுகப் பிரசவம் அடைய, அம்பிகையின் அருள்பெற்ற விளக்கெண்ணெயை, அடிவயிற்றில் தடவிக்கொள்வது உரிய பலனைத் தரும் என்பது நம்பிக்கை. திருமணம் நடப்பதற்கும், திருமணமாகி கருத்தரிப்பதற்கும் பெண்கள் இந்தத் திருக்கோவிலுக்கு நேரில் வந்து, அம்பாள் சன்னிதியில் உள்ள வாசல்படியை நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட்டுச் செல்கிறார்கள். நேரில் வர இயலாதவர்களுக்கு, தபால் மூலம் பிரசாதம் அனுப்பும் திட்டமும் கோவில் நிர்வாகத்தால் செயல்படுத்தப்படுகிறது.

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பாபநாசத்தில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர் நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாலியமங்கலத்திற்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், விருத்த காவிரி என்னும் வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது திருக்கருகாவூர் திருத்தலம். 

Trending News

Latest News

You May Like