1. Home
  2. ஆன்மீகம்

ஒவ்வொரு செயலையும் "சாயி" நாமத்தோடு ஆரம்பி... நமக்கு என்ன தேவை என்பதை நம்மை விட பாபாவுக்கு தெரியும்..!

1

பசியால் வாடும் உயிரினங்களுக்கு உணவிடுங்களேன் என்று சொல்லும் பாபா அந்த அதிகப்படியான உணவையும், தரவேண்டும் என்ற மனப்பான்மையயும் பக்தனுக்கு கொடுப்பது எத்தகைய அபரிமித சக்தி. நான் கடவுள் அல்ல.. நானும் உங்களைப் போன்ற ஒருவன் தான். உங்களுக்கு வேண்டியதை இறைவன் செய்வான் என்று நம்மை திசை திருப்பி அந்த இறைவனாகவும் காட்சி தந்து சர்வமும் நானே என்ற உண்மையை ஒவ்வொரு கணத்திலும் எங்கோ ஒரு மூலையில் ஒரு பக்தனுக்கு இன்றும் நிரூபித்துக்கொண்டிருக்கிறாரே. வியாழன் தோறும் விரதமிரு.. அசைவத்தே அறவே ஒதுக்கு... பாபா கோயிலுக்கு சென்று வழிபடு...பாபாவுக்கான மந்திரங்களை படி.. ஸ்லோகங்கள் சொல்லு... இதையெல்லாம் செய்தால் நீ வேண்டியதை உனக்குத் தருவார் என்று பக்தர்களுக்கு வழிகாட்டுவதை விட  சாயி.. சாயி என்று அவன் நாமத்தை விடாமல் பற்றிக்கொள். நீ மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலையும் அவன் நாமத்தோடு ஆரம்பி.அவன் செய்யும் நன்மைகள் தள்ளிப்போகலாம்… தாமதிக்கலாம்..சோர்வுறாதீர்கள். நமக்கு என்ன தேவை என்பதை நம்மை விட பாபாவுக்கு தெரியும்.

பாபாவுக்கு பூரண போளிகள் என்றால் மிகுந்த விருப்பம். பக்தர்கள் கொண்டுவரும் போளிகளைப் பிட்டு ஒரு விள்ளலேனும் வாயில் இட்டபிறகே மற்றவர்களுக்கு அது பிரசாதமாக போகும். அதிலும் அவருக்கு பிடித்த பக்தை ஒருவள் இருந்தாள். பாபா சாப்பிட்டு முடித்தாலும் அவள் கொண்டு வரும் போளிகளை சாப்பிடாமல் விடமாட்டாள். அவர் எவ்வளவு கோபம் கொண்டாலும் புன்சிரிப்புடனே இருப்பாள். அவர் கோபம் தணியும் வரை காத்திருந்து அவர் போளியை உண்டபிறகே திரும்பிச் செல்வாள். தூங்கும் நேரம் கூட சாயி.. சாயி என்று சாயி ஜெபம்தான். காலை எழுந்தவுடன் கடவுளை வணங்கும் பழக்கமெல்லாம் அவளுக்கு கிடையாது. உண்ண மறந்தாலும், உறங்க மறந்தாலும் சாயியின் நினைவை சுவாசிப்பவள் ஆயிற்றே. அதனால் சர்வ காலமும் சாயி ஜெபம்தான். ஒரு விஷயம் நன்றாக நடந்துவிட்டால் சாயியின் கைவண்ணமாயிற்றே என்று மகிழ்வாள். அதுவே சற்று பிசகினாலும் என்ன சாயி.. இப்படி செய்துவிட்டாயே..என்று சாயியைக் குறை சொல்வாள். மொத்தத்தில் சாயி பகவான் மீது பக்தியில் பித்து பிடித்தவளாய் துவாரகமாயியை வலம் வருவாள். அவளுக்கு சாயி மந்திரமும் தெரியாது.. அவருக்குப் பூஜை செய்யும் முறைகளும் தெரியாது. அதனால் சாயி உறங்கும் நேரம் வந்தால் உடன் இருப்பவர்கள் அவளை திருப்பி அனுப்பிவிடுவார்கள். 

பெண்களுக்கு நிகழும் இயற்கை சுழற்சி நேரங்களில்… அந்தத் தருணத்தில் அவளே அவளே தீண்டத்தகாதவள் போல் சித்தரித்து சாயியிடமிருந்து விலகிவிடுவாள். போளி தயாரிக்க மாட்டாள். என்னவோ இவளது போளிகளை உண்டுதான் பரமாத்மா பசியாறுவதாக அவளுக்கு எண்ணம். அந்த மூன்று நாட்களையும் கடந்த பிறகு தட்டு நிறைய போளிகளைக் கொண்டு போய் பாபாவிடம் கொடுத்து உண்ணச் சொல்வாள். ஒருமுறை அவள் வீட்டுக்கு விலக்கானாள். இம்முறை பாபா உடனிருந்தவர்களிடம் எனக்கு போளி சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது செய்து எடுத்துவா என்று பக்தையின் பெயரைக் குறிப்பிட்டு அனுப்பினார். அவள் என்னால் செய்ய முடியாது என்று மறுத்தாள். அவள் செய்து தரவில்லையென்றால் நான் எதையும் உண்ண மாட்டேன். பட்டினிக் கிடப்பேன் என்று பாபா சொல்லியதும் சுற்றியிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

மீண்டும் அவளிடம் சென்று பாபாவின் பிடிவாதத்தைச் சொல்லிஅவளை செய்யுமாறு மன்றாடினர். வேறு வழியின்றி இந்தப் பாவத்திலிருந்து எப்படி விடுதலைப் பெறுவேனோ என்று கண்ணீர் விட்டபடி  போளி தயாரித்து அவர்களிடம் கொடுத்தாள். இம்முறையும் பாபா பிடிவாதமாக நான் அந்தப் பெண்மணியைத்தானே கொண்டு வரச் சொன்னேன் என்று உண்ணமறுத்துவிட்டார். மீண்டும் அந்த பக்தையிடம் இவர்கள் சென்று முறையிட அவள் சாயியின் மேல் கோபம் கொண்டு அவர் இருப்பிடத்தை அடைந்தாள். சொல்லொணாத் துக்கத்தை சுமந்தபடி கண்களில் கோபம் கொண்டு எதற்காக இந்தப் பாவத்தை என்னை செய்யச் சொன்னீர்கள் என்று கண்ணீர் மல்க கேட்டாள்.எப்பொழுதும் என்னை நினைத்தபடியே  இருக்கிறாய். நான் இல்லாத இடமே இல்லை என்று என்னிடம் உரக்க பேசுகிறாய்.பித்து பிடித்தவள் என்று மற்றவர்கள் சொன்னாலும் காதில் வாங்காமல் என்னை பொம்மையாக்கி ஆட்டுவிக்கிறாய்.இந்த அன்பின் தூய்மை ஒன்று போதாதா.. உன்னை தீண்டத்தகாதவள் என்று சொல்லி மனம் முழுக்க தீண்டாமையை வைத்திருப்பவர்கள் முன்னால் உன் அன்பு மட்டுமே என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது என்பதை உணரவைக்கத்தான் இவ்வாறு செய்தேன் என்றார். 

பாபாவுக்கு தேவை.. பூஜையும்.. புனஸ்காரமும்.. மந்திரமும் அல்ல... அவர் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை…  நாம் விழுந்தால் விழுந்து, எழுந்தால் எழுந்து, சிரித்தால் சிரித்து, அழுதால் தேற்றி என சகலத்திலும் இருந்து நம்மைக் காத்து நம் உடன் பயணிக்கும் குருநாதன். நம்மை பின் தொடரும் கர்மாக்களை கண் அசைவில் சாம்பாலாக்கும் சக்தியைக் கொண்டவன். சாயி என்று அழைத்தப்படி நாம் செல்லவேண்டியதில்லை. சாயி என்ற நம் குரல் பாபாவையே நம்மிடம் அழைத்துவரும்.

சாய்ராம்…

Trending News

Latest News

You May Like