1. Home
  2. ஆன்மீகம்

திருவண்ணாமலைக்கு இணையான அமைதியையும் நல்ல ஆன்மிக அனுபவத்தையும் தரும் இடமாக விளங்கும் சதுரகிரி மலை

1

திருவண்ணாமலைக்கு இணையான அமைதியையும் நல்ல ஆன்மிக அனுபவத்தையும் தரும் இடமாக விளங்கும் சதுரகிரி மலை சித்தர்களின் தலைமையிடமாக சொல்லலாம்.

சதுரகிரி பெயருக்கேற்றபடி அமைந்திருக்கிறது. திசைக்கு நான்கு மலைகள் சிவகிரி, பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சித்தகிரி வீதம் பதினாறு மலைகள் சமமாக அமைந்து சதுரமாக காட்சியளிப்பதால் இது சதுரகிரி மலை என்றழைக்கப்படுகிறது. இம்மலையில் அமைந்திருக்கும் கோயிலை தரிசிப்பதற்காக பக்தர்கள் திரளாக கூட்டமாக வருகிறார்கள்.

ஆன்மிகம், ஜோதிடம், மருத்துவம் என எல்லாம் உணர்ந்த ஞானிகளாய் இருந்தவர்கள் சித்தர்கள். இறைவனைக் காண விரும்புவர்கள் பக்தர்கள் என்றால் இறைவனைக் கண்டு மகிழ்ந்தவர்கள் சித்தர்கள். 

மலைப்பகுதியில் மூலிகைகள் நிறைந்த மலைக்குன்று ஒன்று உண்டு. இது சஞ்சீவி மலை என்றழைக்கப்படுகிறது. ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி போகும் போது ஒரு பகுதி இங்கே விழுந்தது என்றும், அதனால் இந்தப் பகுதி மூலிகைகள் நிறைந்த வனமாக காட்சி அளிப்பதாகவும் கூறுகிறது.

சித்தர்களின் தலைமையிடம் சதுரகிரி…

அற்புத சக்திகள் நிறைந்த சித்தர்கள் வாழும் பூமியாக சதுரகிரியாக விளங்கியது. அமாவாசை, பெளர்ணமி தினங்களில் சித்தர்கள், ரிஷிகள் இங்குள்ள மகாலிங்கத்துக்கு பூஜை செய்ய வருகிறார்கள். நட்சத்திரங்கள் கூட்டம் கூட்டமாக மலைப்பகுதிகளில் விழும் அழகை காணவே பலரும் வரும் இடமாகவும் இது இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு செல்ல  விருதுநகர் வத்திராய்ப்பு பகுதியிலிருந்து செல்வது எளிதாக இருக்கும்.

சதுரகிரி பயணத்தின் துவக்கம் தாணிப்பாறை. இது மலைஅடிவாரத்தில் துவங்குகிறது. இங்கிருந்து 8 கிமீ நீண்ட மலைப்பாதையில் ஏற்ற இறக்கத்தில் நடந்து போகவேண்டும். மலைப்பாதையின் துவக்கத்தில் இருக்கும் ஆசிர்வாத விநாயகரிடம் ஆசிர்வாதம் பெற்றபிறகே புனிதபயணத்தைத் தொடங்க வேண்டும்.  செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோரக்கர் குகை, இரட்டை சிவலிங்கம், நாவல் ஊத்து, சின்ன பசுகடை, பெரிய பசுகடை  நடந்து இறுதியாக பிலாவடிக் கருப்பர்  ஆலயத்தில் பயணம் நிறைவடையும். வழியில் குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன. 

காலாங்கிநாதர் உருவாக்கியபிரம்மதீர்த்தத்தில் நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் பெருகும் என்பது ஐதிகம். சதுரகிரியில் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் சுந்தரமூர்த்திதான். இதை பிரதிஷ்ட செய்தவர் அகத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லிங்கத்தை பல சித் தர்களும் வணங்கி வழிபட்டதால் சுந்தரமூர்த்தி லிங்கத்தின் சக்தி அபரிமிதமானது. இவரை வேண்டி வழிபடும் எந்த ஒரு செயலும் வீணானதில்லை என்கிறார்கள் பக்தர்கள். தினமும் காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம்  பூஜைகள் நடக்கின்றன.

சித்தர்களின் தலைமையிடம் சதுரகிரி…

சுந்தரமகாலிங்கத்தை அடுத்து தரிசிக்க வேண்டியது சந்தன மகாலிங்கம் ஆலயம். நாணல் செடிகள் நிறைந்திருக்கும் வனப்பகுதியாக இருந்தது. நாளடைவில் பக்தர்கள் தரிசிக்க ஏதுவாக படிக்கட்டுகளை அமைத்து பாதை அமைத்திருக்கிறார்கள்.  இங்குதான் சட்டநாத சித்தர் தவம் புரிந்த குகை இருக்கிறது. இங்கு அருகிலேயே ஸ்ரீ சந்தன மகாதேவி அம்மன் சன்னிதி இருக்கிறது. இங்கிருந்து ஒன்றரை கிலோமீட்டர்  தூரம் நடந்தால் வனக்காளி, பரவைக்காளி என்றழைக்கப்படும் காளிதேவி சிலை இருக்கிறது. இங்கிருக்கும் மரம் அகத்தியர் நிற்பது போன்ற பாவனையில் இயற்கையாகவே அமைந்திருக்கிறது.

தெய்வங்களையெல்லாம் தரிசித்த பிறகு மீண்டும் மலையேறினால் அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில்  தவசிப்பாறை வருகிறது. சந்தன மகாலிங்கம் கோவிலில் இருந்து பார்த்தால் தவிசிப்பாறையை காணலாம். தவசி பாறைக்கு கீழே தவசி குகை உண்டு. இதில் சித்தர்கள் கண்ணுக்கு தெரியாமல் சூட்சுமமாக வந்து போவதாக சொல்கிறார்கள்.

குகைக்குள் செல்வதாக இருந்தால் பத்தடி தூரத்துக்குள் தவழ்ந்துதான் போக வேண்டும். அதன்பிறகு ஐந்தடி தூரத்துக்கு முழங்காலில்  நடந்து போகலாம். அதன்பிறகு நடக்கலாம். அங்கிருந்து கீழிறங்கும் வழியில் பெரிய மகாலிங்கம்,வெள்ளை விநாயகரை தரிசித்து  மீண்டும் சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வந்தடையலாம். பெரிய மகாலிங்கம் சுயம்பு லிங்கம். இது பெரிய பாறையில் இயற்கையாக உருவானது. சுற்றியிருக்கும் மரத்தின் வேர்கள் சடைபோல் இதைப் பின்புறமாக பிடித்து வைத்திருக்கின்றன.

சதுரகிரியில் ஓடுகின்ற  தீர்த்தங்களும், மூலிகைகளும் உடலில் பல நோய்களைத் தீர்த்துவைக்கிறது. மலையில் ஏறி இறங்கும் போது உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றி மூலிகை கலந்த காற்று உடலில் படுகிறது.  சித்தர்கள் உலாவரும் சதுரகிரி மலைப்பகுதியில் பெளர்ணமி நாட்களில் கிரிவலம் செய்து மகாலிங்கத்திடம் வேண்டியதைப் பெறுகிறார்கள் பக்தர்கள். சதுரகிரி கிரிவலம் உடலுக்கும் உள்ளத்துக்கும் அமைதி தரும் அற்புதமான சுகானுபவம்… அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும்.

Trending News

Latest News

You May Like