1. Home
  2. ஆன்மீகம்

குறும்புக்கார கண்ணனை வரவேற்க தயாரா? #krishna janmashtami Spl

1

மக்களை காக்க  இறைவன் எடுத்த பல அவதாரங்களில்,குறும்பும் மகிழ்ச்சியும் இளமைத் துள்ளல் அதிகமாக உள்ள ஒரே அவதாரம் மாயக்கிருஷ்ணனின் அவதாரமே.

யாழ் இசைக்கருவி தரும் இன்பத்தை விட இனிதானது மழலைக் குரல் என்போம். மழலையாக , காண்போரை மட்டுமன்றி நினைப்போரையும் கவர்ந்திடும் காந்தமே கிருஷ்ண பரமாத்மா.

நம் வீட்டு குழந்தை தோற்றத்தை கொண்டிருந்தாலும் மிகப் பெரிய தத்துவங்களை மனித குலத்துக்கு கொடுத்த்வர் கிருஷ்ணர். 

கீதையின் நாயகன் கிருஷ்ணர் ," மகிழ்ச்சி வெளியில் இல்லை. ஒவ்வொருவரின் மனதில்தான் இருக்கிறது"  என்பதை நமக்கு அனுபவங்கள் மூலம் உணர்த்தியிருக்கிறார். அவரை நாம்  என்னவாக நினைக்கிறோமோ அதன் படியே நமக்கு காட்சி தருகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

கோகுலாஷ்டமி கிருஷ்ணாவதாரத்தை வரவேற்கும் முகமாக கொண்டாடப்படுவது. கிருஷ்ணாவதாரம் புவியில் எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை விரித்து ஆடுகிறதோ, அப்போதெல்லாம் விஷ்ணு அவதாரமெடுத்து  தர்மத்தை நிலைநாட்டுவார் என்பதை உணர்த்துவது .

மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி .இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ணர் பிறந்த தினம் அஷ்டமி.கிருஷ்ணருக்கு அவருடைய பெயரில் இல்லாமல் அவர் பிறந்த இடமான கோகுலத்தை வைத்து, அவர் பிறந்த திதியான அஷ்டமியை வைத்து கோகுலாஷ்டமி என்று வழங்கப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி அன்று, அவருக்குப்  பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் கொண்டாடுகிறோம்.

கிருஷ்ணருக்கு வெண்ணெய் நிவேதனம் செய்யப்படுகிறது. கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். வரியைக் கட்ட மக்கள்  வெண்ணெய் விற்க வேண்டியதாயிற்று.  கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணெயைத் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான்.  எதிர்த்துப் போராடும் குணத்தையும், அநீதியைப் பொறுத்துக் கொள்ளலாகாது என்ற பாடத்தையும் தனது செயல்களால் சொல்லிக் கொடுத்தவர் கிருஷ்ணர்.

 நடுநிசியில்  கிருஷ்ணன் அவதரித்ததால்  கோகுலாஷ்டமி  மாலை நேரத்தில் கொண்டாடப்படுகிறது . கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை,முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகிறது.

அன்றைய தினம்,பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க சகல மங்களம் விளையும்.
கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

Trending News

Latest News

You May Like