1. Home
  2. ஆன்மீகம்

இந்த கோவிலில் வேண்டிக் கொண்டால் திருமணத்தடை நீங்கும்..! ​​​​​​​

1

கோவை மாநகரில் கோட்டை ஈசுவரன் கோவில், பேட்டை ஈசுவரன் கோவில் என்ற இரண்டு சிவாலயங்களுக்கு மத்தியில் பழம் பெருமையுடன் விளங்குவது அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில்.

கோவை மாநகரின் தனிப்பெரும் அரசியாக கோனியம்மன் விளங்கி தன்னை வணங்குவார்க்கு தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வரியா மனந்தரும் என்ற அபிராமி அந்ததி கூறும் முறையில் திருவருட்செல்வம் வழங்கி வருகின்றாள்.சைவாகம விதிப்படி அமைந்த துர்க்கா தேவியே நம் கோனியம்மையாகும்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கோசர் மரபினர் கொங்கு மண்டலத்தை ஆண்டனர். அவர்கள், ஒரு மண் கோட்டையையும், ஓர் ஊரையும் அமைத்தனர். அக்கோட்டையின் காவல் தெய்வமாக கோனியம்மனுக்கு கோயில் கட்டி எழுந்தருளச் செய்தனர்.

கிராமமாக இருந்த கோவன்புதூர், இன்று முக்கிய பெரிய நகரமாக விளங்க அருள் செய்து விளங்குபவள் கோனியம்மன். கோவை நகர மக்களும், கோனியம்மனையே முக்கிய தெய்வமாகவும், தலைமை தெய்வமாகவும் ஏற்றுக்கொண்டு போற்றி வழிபட்டு வருகின்றனர்.

கோன் என்ற சொல்லுக்கு அரசன் என்று பொருள். அது போன்றே கோனி என்பது அரசியைக் குறிக்கும். அன்னை பராசக்தி உலகிற்கு அரசி. இறைவன் உலகிற்கு அரசனாக விளங்கும்போது, இறைவி உலகிற்கு அரசியாக விளங்க வேண்டியதுதானே முறை. எனவே கோவையில் காட்சி தரும் கோனியம்மன் உலக அரசியாக உத்தம அரசியாகத் திகழ்கின்றாள்.

அரசியானவள் நகரின் நடுநாயகமாக விளங்க வேண்டியதற்கேற்ப கோனியம்மன் திருக்கோயில் கோவை மாநகரின் நடுநாயகமாக அமைந்து விளங்குகின்றது.
கருணைப் பெருக்கும், திருமுக மண்டலமும், அன்பு தவழும் புன்னகையும், அருள் சுரக்கும் நயனங்களும் கொண்ட அட்டபுய நாயகியாக வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றாள். வலது திருக்காலை மடக்கி உயர்த்தி பீடத்தின் மீது வைத்தும், இடது திருக்காலால் அசுரன் ஒருவனை மிதித்தும் மங்கல நாயகியாக காட்சி தருகிறாள்.

இந்த கோவிலில் வேண்டிக் கொள்ள திருமணத்தடை நீங்கும் குழந்தைப்பேறு கிட்டும் நோய்கள் நீங்கும் தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை. கோனியம்மனை வேண்டி தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வரன் கிடைக்கப்பெற்றவர்கள் கோயிலிலேயே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து அதன் மேலே மஞ்சள் தேங்காய் வெற்றிலை பாக்கு பூ வைக்கின்றனர். கோனியம்மன் சாட்சியாக திருமணத்தை உறுதி செய்கின்றனர்.நோய் நீங்கவும் மாங்கல்ய பாக்கியத்திற்கும் வேண்டிகொள்கின்றனர்.

Trending News

Latest News

You May Like