தெய்வ வழிபாடுகளின் பலன்கள் வேண்டுமெனில் குலதெய்வ வழிபாடு முக்கியம்..!
குல தெய்வ வழிபாடு கிராம மக்களை நெறிப்படுத்துவதோடு, அவர்களை ஒற்றுமைப்படுத்தவும் செய்கிறது.தொழில் நிமித்தமாக பல இடங்களில் பரவி இருக்கும் உறவினர்களை ஒன்று சேர்த்து காணும் வாய்ப்பை குல தெய்வ வழிபாடே ஏற்படுத்தி கொடுக்கிறது.
மறைந்த முன்னோர் வழிபாடே காலப்போக்கில் குலதெய்வ வழிபாடாக மாறியதாக சொல்கிறார்கள்.குல தெய்வ வழிபாட்டின் மகிமை பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குல தெய்வ வழிபாடுதான் நாளடைவில் பலரும் வணங்கும் சக்தியுள்ள தெய்வ வழிபாடாக மாறி இருக்கலாம் என்று பிரபல அறிஞர் ஆறு.ராமநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
இறந்து போனவர்களின் ஆத்மாவுக்கு ஆற்றல் அதிகம் என்று கருதப்பட்டதால்தான் குல தெய்வ வழிபாடு முறை தோன்றியது.குல தெய்வ வழிபாடு என்பது உலகின் பல நாடுகளிலும் இன்றும் நடைமுறையில் உள்ளது.
குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும்.
மற்ற தெய்வ வழிபாடு களின் பலன்களும் வேண்டுமெனில், குலதெய்வ வழிபாடு முக்கியம்.ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியம்.குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம் கூடவே இருந்து வழிநடத்தும் சக்தி கொண்டது.
உங்கள் வீட்டிலேயே மாதந்தோறும் பெளர்ணமி அன்று குலதெய்வ படத்தை வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குலதெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும்.
வழிபாட்டுமுறை:
பௌர்ணமி அன்று அதிகாலையில் எழுந்து சுத்தமாக குளித்து விட்டு சிவப்புநிற ஆடை உடுத்த வேண்டும். பூஜை அறையில் குலதெய்வ படத்திற்கு மாலை அணிவித்தது, பச்சை அரிசி கோலம் போட்டு மஞ்சள், குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.அதன்மேல் நெய் தீபம் போட வேண்டும். சக்கரைப்பொங்கல், மூன்று அல்லது ஐந்து பழங்கள் வைத்து பூஜை செய்யலாம்.
குலதெய்வ பிரார்த்தனை:
ரோகம், துக்கம், வறுமை, பலவீனம், மனநோய் ஆகியவற்றை அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்த மந்திர வடிவாகத் திகழும் குல தேவதையை வணங்க வேண்டும்.
அவரவர் குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு தினமும் வழிபாடு செய்து வந்தால் குலதெய்வ அருள்கிட்டும்.
குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வதால் தங்கள் குடும்பத்திற்கு எவ்வித குறையும் ஏற்படாது. வளமையான வாழ்க்கை கிடைக்கும்.
குலதெய்வத்தை வழிபட்டால், நம்முடைய குலம் தழைத்து, வரும் சந்ததியினருக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்.
நாமும் குலதெய்வ வழிபாட்டின் மேன்மையைப் புரிந்து கொண்டு குலதெய்வத்தை வழிபட்டு, நமக்கும் நம் சந்ததியினருக்கும் நன்மைகள் தழைத்திட வேண்டுவோம்.