ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால்...
விநாயகப் பெருமான் மட்டும்தான் தெய்வங்கள் அனைத்திலுமே எளியவர்களுக்கு எளியவர். மண்ணை பிடித்து வைத்தாலும் சரி, மாட்டுச்சாணத்தை பிடித்து வைத்தாலும் சரி, அங்கு பிள்ளையார் வந்துவிடுவார். ஆற்றங்கரையில் இருந்து, அரண்மனை வரை எல்லா இடங்களிலும் இருந்து மக்களுக்கு அருள் புரிவார் கணபதி.
வாழ்வில் வரக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கும் வல்லமை பெற்ற விநாயகரை சங்கடஹர சதுர்த்தி தினத்தில் வழிபட்டு, நன்மைகளை பெற்று நல்வாழ்வு வாழலாம். பெரியவர்கள் மட்டுமல்ல சிறு குழந்தைகளும் விநாயகப் பெருமானை வழிபடுவது நல்லது.
எந்தவொரு வேலையை தொடங்கும்போதும் பிள்ளையார் சுழி போட்டு தான் வேலையை ஆரம்பிப்பது பரவலான வழக்கம். விக்ன விநாயகரின் அருளால் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் துலங்கும் என்பது நம்பிக்கை.
பௌர்ணமியை அடுத்து வரும் சதுர்த்தி திதியானது விநாயகருக்கு உகந்த நாள். கேட்ட வரத்தை அளிக்கும் இந்த சங்கடஹர சதுர்த்தி எளிமையான விரதமாகும். சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்து கணபதியை வணங்கினால், குழந்தை இல்லாத தம்பதிகளும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தி
ஞாயிற்றுக்கிழமை நாளான இன்று வந்துள்ள இந்த சங்கரஹட சதுர்த்தி நாளன்று குளித்து முடித்து விட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமானின் படத்திற்கு முன்பாக நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்து விரததத்தைத் தொடங்க வேண்டும்.
நாள் முழுவதும் உபவாசம் இருந்துவிட்டு, மாலையில் கணபதிக்கு விளக்கேற்றி, அருகம்புல், வெள்ளருக்கு என அவருக்கு பிடித்த எளிய பொருட்களை அவருக்கு சாற்றி, கொழுக்கட்டை நிவேதனம் செய்ய வேண்டும்.
அதன்பிறகு விநாயகர் அகவல், அஷ்டோத்தரம் போன்ற பாடல்களை சொல்லி வணங்க வேண்டும். அதன்பிறகு
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதில் முற்றுறக்
கண்ணுத லுடையோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் — உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத் தானைக்
காதலால் கூப்புவர் தம் கை
அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற்பிறந்த
தொல்லைபோம் போகாத்துயரம் போம் –நல்ல
குண மதிகமா மருணைக் கோபுரத்துள் மேவும்
செல்வகண பதியைக் கைதொ தொழுதக் கால்.
என்ற பாடலை படித்து விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள். அனைத்து வித பூஜைகளிலும் வழிபாடுகளிலும் முதலிடம் பெறும் விநாயகரை, பிள்ளையார், கணபதி என பல்வேறு பெயர்களால் வழிபடப்படுகிறார்.