1. Home
  2. ஆன்மீகம்

தீராத கண்நோய்களை தீர்க்க கருவலுார் மாரியம்மன் கோவிலுக்கு போங்க..!

1

கொங்கு மண்டலத்தில் பண்ணாரிக்கு அடுத்த படியாக புகழ் பெற்ற கருவலுார் மாரியம்மன் கோவிலில், உலகை காக்கும் பராசக்தி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருப்பூர் மாவட்டம் அவிநாசிக்கு மேற்கே அன்னுார் செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கருவலுார்.

மேகங்கள் கருவிலிருந்து மழை பொழிந்ததால் கருவலுார் என்ற பெயர் உண்டானதாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. அவினாசி தலத்தில் சுந்தரர், முதலை விழுங்கிய பாலனை உயிர்ப்பிக்க தாமரைக் குளத்தி்ற்கு சென்ற போது, அது வறண்டிருந்தது. மனம் வருந்திய சுந்தரர் உடனடியாக ஈசனை நோக்கி பதிகம் பாடத்துவங்கிய அடுத்த நொடியே கருமேகம் தோன்றி மின்னல்கள் மின்ன பெரு மழை பொழிந்தது. அதுவே ஆறாகப் பெருகி, அவிநாசி தாமரைக்குளமும் நிரம்பியது. முதலையும் தான் விழுங்கிய பாலனை உமிழ்ந்து உயிர்ப்பித்தது. நள்ளாற்றின் கரையில் உள்ள கங்காதீசுவரரை வழிபட்ட காமதேனு,கருவை ஈன்று கன்றியினைத் தந்ததால் கருவலுார் என பெயர் பெற்றது என்றும் கூறுகிறார்கள்.

பன்னாரிக் குண்டம் முடிந்த மூன்றாம் நாள் இந்த ஆலயத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது. 5 நிலை ராஜகோபுரத்துடன் நடுநாயமாக விளங்குகிறது திருக்கோவில். கருவறை முன்பு இருபுறமும் நீலன், நீலி சிலைகள் உள்ளன. முன் மண்டபம் 30 துாண்களைக் கொண்டது. பக்தர்கள் அமர்ந்து அம்மனை துதித்திட வசதியாக அமைந்துள்ளது இது. திருச்சுற்றில் கன்னிமார்சாமி, மேற்கு நோக்கி அமர்ந்துள்ளார்.கருவறையின் கிழக்கே குதிரைச் சிற்பங்கள் உள்ளன. கருவறை விமானம் மூன்று நிலைகளைக் கொண்டது. சூலம், உடுக்கை, கபாலம், பாசாங்குசம் ஆகியவற்றை கைகளில் ஏந்தியபடி நின்ற கோலத்தில் உலகை காக்க அம்மன் காட்சி தருகிறார்.

வெப்பு நோய் தீர்ப்பவளாய், தீராத கண்நோய்களை தீர்ப்பவளாக கருணையுள்ளம் கொண்டவளாக கருவலுார் மாரியம்மன் தனிச்சிறப்புடன் காட்சி தருகிறாள்.தேரோட்டம் நடைபெறுவதற்கு 15 நாட்கள் முன்பு காப்பு கட்டப்பட்டு கம்பம் நடப்படும். கம்பம் சாட்டிய நாள் முதல் தேரோட்டம் வரை அம்மன் பட்டினியிருப்பதாக ஐதீகம். அந்த நாட்களில் அம்மனுக்கு நைவேத்யம் படைக்கப்படுவதில்லை. இரவில் மட்டுமே பச்சை அரிசி மாவு படைக்கப்படுகிறது. 

திருவிழாவில் முதல் நாள் சிம்ம வாகனத்திலும், இரண்டாம் நாள் பூதவாகனத்திலும், மூன்றாம் நாள் காளை வாகனத்திலும், 4ம் நாள் மலர் பல்லக்கிலும் அம்மன் பவனி வருகிறாள். அன்று திருக்கல்யாணமும், யானை வாகனத்தில் திருவுலாவும் நடைபெறும். 5ம் நாள் தொடங்கும் தேரோட்டம், 7ம் நாள் நிலையை அடைகிறது. இதனை தொடர்ந்து குதிரை வாகனத்தில் பரிவேட்டையும்,காமதேனு வாகனத்தில் உலா வருதலும், இரவில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக இருக்கும் என்று சிலிர்க்கின்றனர் பக்தர்கள்.

கருவலுாரில் மாரியம்மன் ஆலயத்தை தரிசித்த கையோடு அருகே உள்ள கல்யாண வெங்கட்ரமண சுவாமி,வேணுகோபால சுவாமி, கங்காதீசுவரர் ஆலயங்களுக்கும் சென்று வந்தால் துயரங்கள் அனைத்தும் பஞ்சாகப் பறந்து போகும்.

அப்புறமென்ன கருவலுார் கிளம்புவோமா…..

ஒம் சக்தி பராசக்தி

Trending News

Latest News

You May Like