1. Home
  2. ஆன்மீகம்

இது தெரியுமா ? பில்லிசூனியம், ஏவல், கண்திருஷ்டி தீர்க்கும் முக்கூடல் தலம்..!

1

தென் தமிழகத்தின் கிராமியத் தெய்வ வழிபாட்டில் முக்கியப் பங்கு வகிப்பவள் பச்சையம்மன். உலக மக்களின் தவ வாழ்வுக்கு தாமே ஓர் எடுத்துக்காட்டாகத் தவம் புரிந்து ஈசன் அருளைப் பெற்று உயிர்களைக் காத்தருளிய பச்சையம்மன் பூமிக்கு வந்தது மிகப் பெரிய கதை. 
சேலம், கோவை, ஈரோடு, வடாற்காடு, தென்னாற்காடு போன்ற மாவட்டங்களில் பரவலாக பக்தர்கள் பச்சையம்மன் வழிபாடு மேற்கொள்கிறார்கள்.இக்கோயில் ஊரைவிட்டு தனித்து, நீர் நிலைகள் உள்ள பகுதியின் அருகில் அமைந்திருக்கும். அம்பிகை அனைத்து பரிவாரங்களுடன் சம்பூர்ண கோலத்துடன் இருப்பாள்.தீ மிதித்தல், மொட்டையடித்து காதுகுத்துதல், திருமணம் போன்ற சம்பிரதாயங்கள் இக்கோயிலில் நடைபெறும். 

பில்லிசூனியம், ஏவல், சொத்துப்பிரச்சனை, கண்திருஷ்டி தீர்க்கும் முக்கூடல் தலம்

பச்சையம்மன் ஆலயங்களுக்கெல்லாம் முதன்மையான ஆலயம் வாழைப் பந்தல் பச்சையம்மன். சிவபெருமான் மனித உருவில் குடி கொண்ட கோவில், மஹாவிஷ்ணுவும் சிவப்பெருமானும் துவாரபாலகர்களாக விளங்கும் அபூர்வக்கோயில் என பல பெருமைகளைப் பெற்றிருக்கிறது முனுகப்பட்டு பச்சையம்மன் ஆலயம். பிருங்கி முனிவர் ஈஸ்வரனை மட்டும் வலம் வந்ததால் (தனிக்கதை) ஈசனிடம் இடப்பாகம் கேட்ட பார்வதி தேவியிடம், நீ திருவண்ணா மலையில் பவளப் பாறைக் குன்றில் தவமியற்றினால் உனக்கு என் உடலின் இடப்பாகம் தருவோம் என்று பரமசிவன் கூறினார். அம்மையும் சரி என்று சம்மதித்து தன் பயணத்தைத் தொடங்கினாள். அவள் செல்லும் வழி முழுவதும் வெப்பம் தகித்தது. நீர் நிலைகளும் இல்லை. நிழல் தரும் மரங்களும் இல்லை.  ஓரிடத்தில் வாழை மரங்கள் நிறைந்து எழில் சூழ்ந்த இயற்கை பகுதியைக் கண்டாள். அங்கேயே வாழைமரங்களால் பந்தல் அமைத்து தவ மிருக்க முடிவு செய்த பார்வதி தேவிக்கு தண்ணீர் தேவைப்பட்டது. 

ஈஸ்வரனை வணங்க லிங்கம் பிடிக்க வேண்டுமே. அங்கிருந்த மண்ணில் லிங்கம் பிடிக்க எண்ணி தண்ணீர் தேடினாள். தன் பிள்ளைகளான விநாயகரையும், முருகரையும் அழைத்து தண்ணீர் கொண்டுவரச் சொன்னாள். நேரம் ஆகியும் பிள்ளைகள் வராததால் பொறுமையிழந்த பார்வதி தன் கையிலிருந்த பிரம்பினால் பூமியைத் தட்ட நீரூற்று கிளம்புகிறது. அதைக் கொண்டு லிங்கம் பிடித்துவிட்டாள். பிறகு பிள்ளையாரும், முருகரும் ஆளுக்கொரு நதியைக் கையில் பிடித்தப்படி வந்தனர். இவ்விரு நதிகளும், அம்மை உண்டாக்கிய நதியும் இணைந்து மூன்று நதிகள் இங்கு கூடவே இது முக்கூட்டு என்று அழைக்கப்பட்டது. அம்மை பூஜைசெய்யும்போது வாழைத்தோப்பில் இருந்த அரக்கன் தொல்லைதர அதைக் கண்ட  பரமனும், விஷ்ணுவும் வாமுனி, செம்முனி அவதாரம் எடுத்து அரக்கனை வதம் செய்தனர். அதன் பிறகு லிங்க வழிபாட்டை முடித்துக்கொண்டு அம்மை திருவண்ணாமலைக்குச் சென்றாள்.

பில்லிசூனியம், ஏவல், சொத்துப்பிரச்சனை, கண்திருஷ்டி தீர்க்கும் முக்கூடல் தலம்

தண்ணீரைத் தேடி தவித்துப் போன அன்னையின் சிவந்த மேனி லிங்கம் பிடித்து தவம் செய்தபோது சாந்தமாகி பச்சைநிற மேனியாக மாறியதால் இவள் பச்சையம்மன் என்றும், மண்ணில் லிங்கம் பிடித்ததால் ஈசன் மண் லிங்கேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். இவை நாளடைவில் மருவி மன்னார் சாமி ஆனார். இவ்வாலயத்தின் கருவறையில், கதை வடிவில் அம்பாள் பச்சை திருமேனியுடன் அருள்பாலிக்கிறார். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் பச்சை நிற குங்குமமே பிரசாதமாக தரப்படுகிறது. இந்த ஆலயத்தில் வாமுனி, செம்முனி, ஜமதக்கனி முனிவர், அஷ்ட விக்னேஷ்வரர்கள், நவ வீரர்கள், சப்தமுனிகள் ஆகியோரது சிலைகள் பக்தர்களுக்கு அருள் புரிகின்றன.வில்வமரம்,வேப்பமரம் தலவிருட்சமாக இருக்கிறது.

அம்மனுக்கு உகந்தது ஆடி வெள்ளிக்கிழமை, சிவனுக்கு திங்கள்கிழமை என்பதால் ஆடிமாதம் திங்கட்கிழமை இங்கு சோமாவார விழாவாக கொண்டாடப்படுகிறது. பில்லி, சூனியம், ஏவல், சொத்துப்பிரச்சனை, கண்திருஷ்டி போன்றவைத் தீர எலுமிச்சம்பழத்தைக் காலில் நசுக்கி எறிகின்றனர்.பிரச்னைகளை விரட்டுவதற்கு முனிகளுக்கு நடுவில் தேங்காயை வீசி எறிகின்றனர். குழந்தை வரம் கேட்டு வழிபடும் பக்தர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் வரம் தருகிறாள் பச்சை நிற திருமேனியுடைய அம்பாள்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, கமண்டலநதி, பிரம்பகநதி என மூன்றும் ஒன்றும் சேரும் முக்கூடல் எனும் முக்கூட்டில் இத்தலம் அமைந்திருக்கிறது. பச்சையம்மன் மன்னார்சாமியைத் தரிசித்து வேண்டும் வரம் பெறுவோம்.

Trending News

Latest News

You May Like