இது தெரியுமா ? வெற்றியைத் தேடித்தரும் வராஹி அம்மன் பஞ்சமி..!

மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவரது அவதார சக்தியாக உருவானவள் வராஹி, சப்த கன்னிமார்கள் பிராமி, வைஷ்ணவி, மகேஷ்வரி, கவுமாரி, வராஹி, இந்திராணி, சாமுண்டி இவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன், குமரன், இந்திரன், யமன், திருமால் ஆகிய தெய்வங்களின் சக்திகள். இவர்களில் வராஹி, பன்றி முகமும், பெண்ணின் உடலும் கொண்டவர். நான்கு கரங்களை உடையவர். பின்இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டிருப்பார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி, சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பார். தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை!
ராஜராஜ சோழன் வணங்கிய தெய்வம் வராஹி அம்மன்.
சோழமன்னர்களின் வெற்றி தேவதையாக வராஹி அம்மன் விளங்கினாள். சோழ மன்னர்கள் எந்தச் செயலையும் தொடங்கும் முன்பு வராஹிக்கு சிறப்பு வழிபாடு செய்வர். ராஜராஜ சோழன் வராஹி அம்மனை வழிபட்ட பின்னரே எதையும் செய்வார். குறிப்பாக போருக்கு புறப்பட்டுச் செல்லும் போது வராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்திய பின்னர் தான் செல்வார். அதனால் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றனர். இதனால் வராஹி அம்மன் சோழர்களின் வெற்றி தெய்வம் ஆனாள்.
தஞ்சை பெரிய கோவிலில் பெரு வுடையார் ஆலயத்தின் அக்னி திசையில், அம்பாள் சன்னிதிக்கு எதிரில் வராஹி அம்மனுக்கு கோவில் உள்ளது. ராஜராஜசோழன் தஞ்சையில் பெரிய கோவிலை கட்டுவதற்கு பல இடங்களை தேர்வு செய்தார். ஆனால் ஒரு இடமும் சரியாக அமையாமல் இருந்தது. ஒருநாள் வேட்டைக்கு புறப்பட்டு சென்ற போது, ஒரு இடத்தில் அவருக்கு எதிராக பன்றி ஒன்று எதிர்த்து நின்றது. அதனை அவர் துரத்தி சென்றார். ஆனால் அது போக்கு காட்டி பல இடங்களுக்கு சென்று ஒரு பெரிய திடலில் வந்து படுத்துக் கொண்டது. இதனால் வியப்படைந்த ராஜராஜசோழன் அதனை கொல்லாமல் துரத்தினார்.
ஆனால் அது எழுந்து நின்று காலால் பூமியை தோண்டியது. இது குறித்து ராஜராஜசோழன் அரண்மனை ஜோதிடரை அழைத்து விவரம் கேட்டார். அப்போது கோவில் கட்ட இடத்தினை, வராஹி தேவி தேர்ந்தெடுத்து இருப்பதை தெரிவித்தார் ஜோதிடர். அந்த இடத்தில் பெரிய கோவில் கட்டும் முன்பு வெற்றி தேவதை வராஹிக்கு சிறிய கோவில் அமைத்து வழிபட்டு பின்னர் பணியை தொடங்கினார் ராஜராஜன். அன்னையின் அருளால் உலகம் போற்றும் பெரிய கோவிலை கட்டினார்.
மற்ற கோயிலில் எங்கும் இல்லாத ஒரு நடைமுறையும் தஞ்சைப்பெரியகோயிலில் உண்டு. எந்த வழிபாட்டை தொடங்கினாலும், முதலில் விநாயகரை வணங்குவதே மரபு. இங்கு விநாயகருக்குப் பதிலாக வராகியம்மனை வழிபட்டே தொடங்குகிறார்கள்.
அபிராமி அந்தாதியில் இரு பாடல்களில் வராஹி என அம்பிகையை அபிராமிபட்டர் பாடுகிறார்.
நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”
“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’
1.பஞ்சமீ 2. தண்டநாதா 3. ஸங்கேதா 4. ஸமயேஸ்வரி 5. ஸமயஸங்கேதா 6. வாராஹி 7. போத்ரிணி 8. சிவா 9.வார்த்தாளி 10. மஹாசேனா 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி 12. அரிக்னி – என்னும் பன்னிரன்டு சக்திமிக்க மந்திர நாமங்களால் அழைக்கப்படுகிறாள் அன்னை வராஹி..
ஓம் ஸ்யாமளாயே வித்மஹே
ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்