1. Home
  2. ஆன்மீகம்

இது தெரியுமா ? வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை..!

1

சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன்.பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும்.

சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள்.

ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது.

ஒன்று காசி மற்றொன்று தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ளது. இங்குள்ள வராகி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக உள்ளார். இந்த வராகி அம்மன் என்பவள் அம்பாளின் போர்ப் படைத்தளபதி ஆவாள்.

ராஜராஜசோழன் எச்செயலைத் தொடங்கினாலும், வராகியை வழிபட்ட பின்னரே தொடங்குவார். இதனால் இந்த அம்மனை”ராஜராஜ சோழனின் வெற்றித்தெய்வம் என்று வர்ணிப்பர். தஞ்சைப் பெரியகோயில் கட்டுவதற்கு முன்பே, வராகி வழிபாடு இங்கிருந்ததாகக் கூறுவர்.

மற்ற கோயிலில் எங்கும் இல்லாத ஒரு நடைமுறையும் தஞ்சைப்பெரியகோயிலில் உண்டு. எந்த வழிபாட்டை தொடங்கினாலும், முதலில் விநாயகரை வணங்குவதே மரபு.

இங்கு சிவவழிபாட்டைத் தொடங்குபவர்கள் விநாயகருக்குப் பதிலாக வராகியம்மனை வழிபட்டே தொடங்குகிறார்கள். சோழர்களின் வெற்றிக்குரிய தெய்வம் துர்க்கை. இங்கு துர்க்கையின் தளபதியான வாராகிக்கு சன்னதி உள்ளது.

கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் இவளது சன்னதி உள்ளது. இங்கு என்ன வேண்டிக் கொண்டாலும் உடனே நிறைவேறுகிறது. திருமணமாகாதவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் திருமணவரம் உடனே கைகூடுகிறது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து இத்தலத்து அம்பிகையிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன.

வராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. தன்  பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ  மஹா வராஹி அருள் கிட்டும். மந்திரத்துடன் கீழே குறிப்பிட்டுள்ள பூஜை முறைகளையும் செய்ய வேண்டும்.

ஸ்ரீ வாராஹி உபாசனை சிறந்த  வாக்குவன்மை, தைரியம், தருவதோடு எதிர்ப்புகள்,எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் கவசமாகும்.அபிச்சாரம் எனப்படும் பில்லி,சூனியம்,ஏவல்களை நீக்குவாள்.இவளை வழிபடுபவர்கள் எந்த மந்திரவாதிக்கும் அஞ்சத்  தேவையில்லை.ஏதிரிகளின் வாக்கை, அவர்கள் செய்யும் தீவினைகளை  ஸ்தம்பனம் செய்பவள்.வழக்குகளில் வெற்றி தருபவள்.

மந்திர சாஸ்திரபழமொழி :- “வாராஹிக்காரனோடு வாதாடாதே” .

ஸ்ரீ வாராஹி வாக்கு சித்தி அருள்வதில் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியைப் போலவே முதன்மையானவள் .எனவே இவளை உபாசிப்பவர்கள் யாரையும் சபிக்கக்கூடாது அவை உடனே பலிக்கும் ஆனால் அதனால் பாதிப்படைந்தவரின் வேதனைக்கான பாவம் விரைவில் நம்மை வந்தே சேரும் அதில் இருந்து அன்னை நம்மைக் காக்க மாட்டாள்.எனவே எவருக்கும் அழிவு வேண்டி வணங்காமல் ”எதிரிகளால் துன்பம் ஏற்படாமல் காக்குமாறு” வேண்டி வழிபட வேண்டும்.

ஸ்ரீ வாராஹி எலும்பின் அதி தேவதை இவளை வணங்க எலும்பு தொடர்பான வியாதிகளும்,வாத,பித்த வியாதிகளும் தீரும்.

ஸ்ரீ மகாவாராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.

வழிபாட்டு முறைகள் :-

புதன்,சனிக்கிழமைகள்,திரயோதசி திதி,பஞ்சமி திதி,நவமி,திருவோண நட்சத்திரம் அன்றும் வழிபடலாம்.எல்லா மாதங்களிலும் வரும் வளர்பிறை அஷ்டமி அன்று வழிபட சிறப்பான பலன்களைப் பெறலாம்.

ஆடி மாதம் வளர்பிறையின் முதல் 10 நாட்கள் இவளின் நவராத்திரி அந்த நாட்களில் தினமும் அவளுக்கு விருப்பமான நைவேத்தியங்களுடன்  பூஜிக்க வல்வினைகள் யாவும் தீரும் என்று மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

செல்வம் ,அரசியல் வெற்றி,பதவி,புகழ் வேண்டுவோர் பஞ்சமியிலும்,

மனவலிமை,ஆளுமை,எதிர்ப்புகளில் வெற்றியடைய அஷ்டமியிலும் சிறப்பாக வழிபடவேண்டும்.

எல்லா ஜெபங்களுக்கும் கிழக்கு நோக்கியும்,எதிர்ப்புகள் தீர தெற்கு நோக்கியும் அமர்ந்து ஜெபிக்கலாம்.

ஆலயங்களில் உள்ள ஸ்ரீ வாராஹி தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை அணிவிக்க காரியத் தடைகள் நீங்கும்.

வெள்ளைப் பட்டு அணிவிக்க வாக்கு வன்மை ,கல்வியில் மேன்மை உண்டாகும்.

மஞ்சள் பட்டு அணிவிக்கக் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும்,திருமணத்தடை நீங்கும்.

பச்சைப் பட்டு அணிவிக்கச் செல்வப்பெருக்கு ஏற்படும்.

நீலவண்ணப் பட்டு அணிவிக்க எதிர்ப்புகளில் வெற்றி கிட்டும்.

ஸ்ரீ வாராஹி உபாசகர்கள் விளக்கிற்கு பஞ்சு,தாமரைத்தண்டு,வாழைத்திரி பயன்படுத்தலாம்.அதிலும் தாமரைத்தண்டு திரி மிகச் சிறந்தது.

நைவேத்தியங்கள்:-

தோழி எடுக்காத உளுந்து வடை,மிளகு சேர்த்த வெண்ணை எடுக்காத தயிர்சாதம்,மொச்சை ,சுண்டல்,சுக்கு அதிகம் சேர்த்த பானகம்,மிளகு சீரகம் கலந்து செய்த தோசை,நவதானிய வடை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம்,பச்சைகற்பூரம் கலந்த பால்,கருப்பு எள் உருண்டை ,சர்க்கரை வள்ளிக்கிழங்கு,தேன் படைக்கலாம்.

மந்திரம்: ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா”

பூஜை முறைகள்: வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய  வேண்டும். இதன் பலன் தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.

Trending News

Latest News

You May Like