1. Home
  2. ஆன்மீகம்

இது தெரியுமா ? கை மேல் பலன் கிடைக்கும் அற்புத திருத்தலம் இது..!

1

நம்மில் பலருக்கு அலாவுதின் அற்புத விளக்கு பற்றி தெரிந்திருக்கும். ஆனால் நம் புராணத்தில், புனித பசுவாக தேவலோகத்தில் இருந்து அற்புதங்கள் தந்த காமதேனுவை பலருக்கு தெரியவில்லை. இமயமலையின் சிறப்பை மறந்துவிட்டு ஆல்ப்ஸ் மலையை அதிசயிக்கும் அறிவாளிகளின் தலைமுறை நம்முடையது.

இந்த இந்து மதம் – வழிபாட்டுக்கான வழிமுறை மட்டுமல்ல ,வாழ்வியல் தத்துவம். இன்றைக்கு நவீன உலகில் , ஒருவர் இன்னொருவரை பார்க்கும் போது பேசிக்கொள்ளும் முக்கிய செய்தி , உடல் நலன்  குறித்த விசாரணை தான். சுற்றுச்சூழலை தொடர்ந்து பாழ்படுத்தி வருவதாலும் , நாகரீக போர்வையில் பல தவறுகளை செய்வதாலும் எங்கு பார்த்தாலும் நோய்களின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்  மக்கள். நோய் நாடி நோய் முதல் நாடி உணர்வதே நோய்மையிலிருந்து மீள்வதற்கு வழி என்கிறார் வள்ளுவர். நோய்மைகளில் இருந்து மீள கண்கண்ட தெய்வமாய் அருள்பாலிக்கிறார் மருந்தீஸ்வரர். வந்த நோய் மட்டுமல்ல, நோயே வராமல் காக்கும் வைத்தீஸ்வர் நம்முடைய மருந்தீஸ்வரர்.

தமிழகத்தின் மத்தியில்  சோழ மண்டலமாய் விளங்கிய சீர்காழியில் வைத்தீஸ்வரராய் அருள்பாலித்திருக்கும் எம்பெருமான் தொண்டை மண்டலத்தில் திருவான்மியூரில் மருந்தீஸ்வரராக அருளிச் செய்து வருகிறார்.

அகத்திய மாமுனி ஒரு முறை தீராத வயிற்றுவலியால் துடித்தார் . அந்த வலியின் கொடுமையை சித்த மருத்துவ முறைகளின் மூலம் நீக்கிய சித்தராக வந்து சிவனாரே போதித்த இடம் திருவான்மியூர்.  இந்த திருத்தலத்தில் நோய் தீர்க்கும் அற்புதம் இன்றுவரை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இங்கு  மருந்தீஸ்வரராக காட்சி தந்து நம்மையெல்லாம் நோய்மையில் இருந்து விடுதலை தருகிறார் ஈசன்.

தேவலோகத்தில் வசிஷ்ட மாமுனி யாகம் செய்த போது  யாகத்தில் பால் சொரிய தாமதித்தது காமதேனு. இதனால் சபிக்கப்பட்டு , சாதாரணப் பசுவாக மாறி, பூலோகம் வந்தடைந்தது. வசிஷ்டர் சாபம் நமக்கு புண்ணியமானது. தனது சாபம் நீங்க மண்ணுலகில்  காமதேனு வந்திறங்கிய இடமே திருவான்மியூர்.  `வான்மீகம்’ என்று சொல்லப்படும் புற்றுகள் நிறைந்த இடம் என்பதால், இது `வான்மிகியூர்’ பின்னர் திருவாகி ஈசன் அருள் பெற்றதால் திருவான்மியூர் ஆனது. . ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர், தனது களவு வாழ்க்கையின் சாபங்கள் தீர இங்கு வந்து வழிபட்டார் என்பதால், வான்மீகியூர் என்றானது என்பதும் ஒரு செய்தி.

வான்மியூரில்  ஓங்கி, உயர்ந்து நின்ற புற்றுகளிடையே இருந்த சுயம்புலிங்கத்தை கண்டுகொண்ட காமதேனு , தனது சாபங்கள் நீங்க, லிங்கத்தின் மீதுபாலைச் சொரிந்து வழிபட்டது.அப்போது அதீத பக்தியினால் அவசரப்பட்டு  பசுவின் கால் ,லிங்கத் திருமேனி மீது பட்டுவிட்டது. அந்த தழும்பை இன்றும் ஈசனின் லிங்கத்தில் காண முடிகிறது. திருவான்மியூர் திருத்தலத்தில் காமதேனுவின் கால் பட்டதை திருத்தழும்பாக ஏற்று பால்வண்ண நாதராக, அன்னை திரிபுரசுந்தரியோடு காட்சிதருகிறார் சிவபெருமான்.

கணபதி, முருகர், தட்சிணாமூர்த்தி, துர்கை. என பரிவார தெய்வங்களோடு  அருள் பாலித்து வருகிறார் சிவபெருமான்.சந்திரனும் சூரியனும் ஒருசேர இங்கு வந்து வழிபட்டதால், மற்ற கிரகங்கள் இங்கு மறைந்து நின்றது எனவும், அதனாலேயே இங்கு நவகிரக சன்னதி கிடையாதுஎனவும் கூறப்படுகிறது.

பாசம், அங்குசம் தாங்கி, அபய வரத ஹஸ்தம் காட்டும் திருக்கரங்களோடு அடைக்கலம் தரும் அன்னை திரிபுரசுந்தரியின் சன்னதிக்கு வெளிப்புறம் தூணில் இருக்கும் சரபேஸ்வரர் சக்தி வாய்ந்தவர்.

ஈசன் , அகத்திய மாமுனிக்கு  திருமணக் கோலம் காட்டியதும், சித்த வைத்திய முறைகளைக் கேட்டு அறிந்ததும் இந்த ஆலயத்தின் வன்னி மரத்தின் அடியில்தான். இதனால் தான் இங்கு ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி மாத பிரம்மோற்ஸவத்தில் ஒன்பதாம் நாள் ஈசன் அகத்தியருக்கு இந்த வன்னி மரத்தடியில் காட்சிதருகிறார்.

பக்தருக்கான திசை மாறிய மருந்தீஸ்வரர்

இத்திருக்கோயிலில்  மருந்தீஸ்வரர்  ஆரம்பத்தில் கிழக்கு நோக்கி இருத்திருக்கிறார். ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர்  மருந்தீஸ்வரரை தரிசிக்க வந்திருந்தார் அப்பையதீக்ஷிதர் என்ற பக்தர். அன்றைக்கு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயிலின் கிழக்கு பகுதி மங்கள ஏரியாக இருந்தது. மழையினால் பெரு வெள்ளம் சூழ இருந்ததால் , மருந்தீஸ்வரரை தரிசிக்க முடியாமல் தவித்து போனார் அப்பைய தீக்ஷிதர். இந்த பக்தரின் வேண்டுகோளுக்காக மனமிரங்கி ,  மேற்குப்புறமாகத் திரும்பினார் மருந்தீஸ்வரர் என்கிறார்கள்.

அனைத்து நோய்களுக்கும் மருந்தாகும் அபிஷேகப் பால் 

அதிகாலை கோபூஜையையும்,அர்த்தஜாம பால் அபிஷேகத்தையும் காண நமக்கு கண்கள் போதாது. இத்திருக்கோயிலில் அபிஷேகப் பாலே சகல வியாதிகளுக்கும் மருந்தாகிறது.

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரரை தரிசித்து உடல், மன நோய்கள் நீங்கி பெரு வாழ்வு வாழ்வோம்.

ஓம் நமச்சிவாய…..

Trending News

Latest News

You May Like