1. Home
  2. ஆன்மீகம்

இது தெரியுமா ? மூன்று சக்திகளைக் குறிக்கும் விதமாக திரிசக்திக் கோவில்கள் சென்னையை சுற்றி அமைந்துள்ளது..!

1

திருமுல்லைவாயிலில் கொடியிடை அம்மன் கிரியா சக்தியாகவும், மீஞ்சூர் அருகிலுள்ள (வட) மேலூர் திருவிடை அம்மன் இச்சா சக்தியாகவும், திருவொற்றியூர் வடிவுடை அம்மன் ஞான சக்தியாகவும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள். வெள்ளிக்கிழமை பவுர்ணமி இரண்டும் சேர்ந்து வரும் நாளில் இந்த மூன்று அம்பிகைகளையும் ஒரே நாளில் முறையே காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் தரிசித்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அக - புற இருள் அகற்றும் அன்னை கொடியிடை அம்மன்

சென்னை அண்ணா நகரில் இருந்து  அம்பத்தூர் செல்லும் ரோடில் ஆவடிக்கு செல்வதற்கு  முன்னால் உள்ளது திருமுல்லைவாயில். இந்தத் திருத்தலத்தில்  ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் ( ஸ்ரீ நிர்மலமணீஸ்வரர்) உடனுறை அம்பாள்  : ஸ்ரீ கொடியிடை நாயகி (ஸ்ரீ லதாமத்யாம்பிகா ) தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகள் தீர்த்து வருகிறாள்.

வள்ளலார், சுந்தரர், அருணகிரிநாதர் பாடி வழிபட்ட  இந்த தலம் 32 தேவார பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று.

தல வரலாறு

காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த தொண்டை நாட்டின் அரசன் தொண்டைமான் ஒரு முறை திக்விஜயம் மேற் கொண்ட போது, எருக்கந்தூண்களும் வெங்கலக்கதவும் பவழத் தூண்களும் கொண்ட புழல்கோட்டையிலிருந்து பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்த ஓணன், காந்தன் என்னும் அசுரர்களால் போரில் தோற்கடிக்கப்பட்டான். போரில் தோல்வியுற்ற தொண்டைமான் தனது யானையின் மீது மிகவும் மனம் நொந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது யானையின் கால்களை முல்லைக் கொடிகள் சுற்றிக் கொண்டன. யானை முன்னேறிச் செல்ல மிகவும் கஷ்டப்பட்டதால் தொண்டைமான் தனது வாளினால் முல்லைக் கொடிகளை வெட்டி யானை முன்னேறிச் செல்ல வழி ஏற்படுத்தினான். 

அக - புற இருள் அகற்றும் அன்னை கொடியிடை அம்மன்

அப்போது வாள் பட்டு முல்லைக் கொடிகளின் கீழே இருந்து இரத்தம் வருவதைக் கண்டான். யானையிலிருந்து கீழே இறங்கி முல்லைக் கொடிகளை விலக்கிப் பார்த்தபோது அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தான். இறைவனை வணங்கி தான் செய்த தவறை பொறுத்துக் கொள்ளும்படி அவரிடம் வேண்டினான். இந்த தல வரலாற்றை சுந்தரர் தனது பதிகத்தில் 10வது பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

இறைவன் அவன்முன் தோன்றி அரசனை வாழ்த்தி அருளி அவனுக்குத் துணையாக நந்தியம்பெருமானையும் போருக்கு அனுப்பினார். அரசன் அசுரர்களுடன் மறுபடியும் போர் செய்து அதில் அவர்களை வெற்றி கொண்டான். தனக்கு உதவி செய்த இறைவனின் அருளைப் போற்றி சிவபெருமானுக்கு அவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பினான். அசுரர்களை வென்று அவர்கள் கோட்டையிலிருந்து கொண்டுவந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை தான் எழுப்பிய சிவாலயத்தில் இறைவனின் கருவறை முன்பு பொருத்தி வைத்தான். அந்த இரண்டு வெள்ளருக்கத் தூண்களையும் கருவறையின் வாசலில் காணலாம்.

திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவஸ்தலம் தென்திருமுல்லைவாயில் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

.இத்திருக்கோவிலுக்குள்  நுழையும் முன்னால் உள்ள  பதினாறு கால் மண்டபத்தில்   செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்கள் நம்மை வெகுவாக ஈர்க்கின்றது.

கிழக்கு நோக்கிய சன்னதியில் சுயம்பு மூர்த்தியாக உயரமான லிங்கம். சதுரபீட ஆவுடையார். லிங்கத்தின் மேற்புறம் வெட்டுப்பட்டுள்ளது. ஆதலால் அபிஷேகங்கள் சிரசில் கிடையாது. ஆவுடையாருக்குத் தான். வாளால் வெட்டுப்பட்டதால் மாசிலாமணீஸ்வரர் குளிர்ச்சி வேண்டி எப்போதும் சந்தனக் காப்பிலேயே காட்சி தருகிறார். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படுகிறது.

அக - புற இருள் அகற்றும் அன்னை கொடியிடை அம்மன்

தொண்டைமானுக்கு உதவி செய்ய புறப்படும் நிலையில், நந்தி சிவபெருமானை நோக்கி இல்லாமல், கோவில் வாசலை நோக்கி திரும்பி உள்ளது. இறைவன் கருவறை சுற்றுப் பிரகாரத்தில் மேற்குச் சுற்றில் நால்வர் திரு உருவங்கள் உள்ளன. மேலும் மேற்குச் சுற்றுச் சுவரில் 63 நாயன்மார்கள் உருவங்கள் சித்திரங்களாக காட்சி அளிக்கின்றன. கருவறையின் வடக்குச் சுற்றில் நடராஜர் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சுவாமிக்கு முன்பு வெளியில் துவாரபாலகர்கள், தொண்டைமான், நீலகண்ட சிவாசாரியார், மகாவிஷ்ணு ஸ்ரீதேவி பூதேவி ஆகிய திருவுருவங்கள் உள்ளன..

கிழக்கு வெளிப் பிரகாரத்தில் பைரவர் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காணப்படுகிறார். இக்கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது. வசிஷ்ட முனிவர் இத்தலத்திற்கு வந்து தவம் செய்து தெய்வீகப் பசு காமதேனுவை பெற்றார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ள திருமுல்லைவாயில் சென்று மாசிலாமணீஸ்வரர் உடனுறை கொடியிடை அம்மனை முழு நிலவு நாளாம் பவுர்ணமியில் தரிசித்து நமது அக , புற இருளை அகற்றிக் கொள்வோம்.

Trending News

Latest News

You May Like