1. Home
  2. ஆன்மீகம்

இது தெரியுமா ? சிலந்தியும் யானையும் ஈசனை வழிபட்ட தலம்..!

1

சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் நீருக்குரிய தலம்  திருஆனைக்காவல், திருவானைக்கா என்று புராணப் பெயரிலும்  திருவானைக் கோவில் என்று மக்களாலும் அழைக்கப்படும் இந்தத் தலம், தேவாரம் பாடப்பெற்ற ஜம்புகேஸ்வரர் தலம். சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களையும், ஐந்து பிரகாரங்களையும் உடையது. அகிலத்தை ஆளும் அகிலாண்டேஸ்வரி சந்நிதி நான்காம் பிரகாரத்திலும், மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள்பிரகாரத்திலும் அருள்பாலிக்கிறார். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், தாயுமானவர், காடவர் கோன், அருணகிரிநாதர் போன்றோரால் பாடல் பெற்ற திருத்தலம் இது.  தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் ஜம்புகேஸ்வரர் 60 வது தலமாக விளங்குகிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இக்கோயில்  ஞான சக்தி பீடமாக விளங்குகிறது.   

சிவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு பூமிக்கு வந்த அன்னை சிவனை வழிபட விரும்பினாள். காவிரி ஆற்றங்கரையில் உள்ள நீரை எடுத்து சிவனை வழிபட லிங்கம் ஒன்றை வடிவமைத்தாள். அம்பிகையின் கையில் இருந்த நீர் லிங்கமாக மாறியது. அன்னை அந்த லிங்கத்தை வழிபட்டு ஆனந்தம் அடைந்தாள். சிவன் அந்த லிங்கத்தில் எழிந்தருளி அன்னைக்கு காட்சி தந்தார். அன்னையால் நீரில் உருவாக்கப்பட்ட லிங்கம் கொண்ட தலம் இது என்பதால் தான் பஞ்சபூத தலங்களில் நீருக்குரிய தலமாக மாறிற்று. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர்லிங்கம் நாவல் மரத்தின் கீழ் அமைந்தது.  நாவல் பழத்துக்கு வடமொழியில் ஜம்பு என்ற பெயர் உண்டு என்பதால் ஜம்புகேஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார். 

புராண வரலாறு

புட்பதந்தன், மாலியவான் என்னும் சிவகணங்கள் கயிலாயத்தில் சிவனுக்கு சேவை செய்துவந்தன. இவர்கள் இருவருக்குள்ளும் எப்போதும் போட்டி இருக்கும். ஒருமுறை யார் சிவனுக்கு அதிகமாக சேவை செய்கிறார்கள் என்ற போட்டி வந்தபோது யானையாகவும், சிலந்தியாகவும் மாறக் கடவுவது என்று சபித்துக்கொண்டனர். மாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யானையாகவும் பூலோகத்தில் பிறந்தனர். சிவலிங்கம் கூரையில்லாமல் வெயிலிலும் மழையிலும் வாடியது. சிலந்தி சிவனின் மீது வலைபின்னி மரத்தின் சருகுகள்  விழாமலும், வெயில், மழை   சிவன் மீது படாமலும் காத்தது. யானை ஆற்று நீரை எடுத்து வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பூவைத்து வழிபட்டது. வரும்போதெல்லாம் யானை சிலந்திவலையை எடுத்தெறிய, சிலந்தியும் சிவனின் மீது வலைப்பின்னலைத் தொடர்ந்தது.  ஒருமுறை கோபம் கொண்ட சிலந்தி யானையின் தும்பிக்கையில் நுழைந்தது. இரண்டுக்கும் நடைபெற்ற போராட்டத்தில் இருவரும் மடிந்தனர். யானைக்கு முக்தி கொடுத்த சிவன் சிலந்தி யானையைக் கொல்ல முயன்றதால் மீண்டும் பிறப்பு கொடுத்தார். அந்த சிலந்தியே மறுபிறவியில் கோச்செங்கட்சோழனாக பிறப்பெடுத்தார். இவர் எழுப்பிய கோயிலே இது. அதனால்தான் யானைகள் கோயிலுக்குள் போக முடியாதபடி சிவனுக்கு கோயில்களைக் கட்டினார். இவர் எழுப்பிய 70 சிவன் கோயில்களுமே மாடக்கோயில்கள் தான். இவர் கட்டிய முதல் மாடக்கோயில் திருவானைக்கா  ஜம்புகேஸ்வரர் கோயில்.

சிலந்தியும் யானையும் ஈசனை வழிபட்ட தலம்

இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை கட்டுவதற்கு இறைவனே  விபூதிசித்தராக வேடம் தரித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இம்மதிலைக் கட்டுவதற்கு கூலியாக திருநீறையே கொடுத்ததாகவும் அவர்களது உழைப்புக்கேற்ப இவை தங்கமாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது.  அதனால் தான் இம்மதிலானது திருநீற்றான் மதில் என்று அழைக்கப்படுகீறது.மூலவர் ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வெண்டும் என்பதை உணர்த்தும் விதமாக  மூலஸ்தானம் எதிரில் ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. ஜம்புகேஸ்வரரைத் தரிசிக்க விரும்புபவர்கள் இந்தத் துளை வழியேதான் தரிசிக்க வேண்டும். அவ்வாறு தரிசித்தால் ஒன்பது தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். ஜம்புகேஸ்வரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். கோடைக் காலத்திலும் , காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும் கூட இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது இத்தலத்திலன் சிறப்பு.

சிவாலயங்களில் அன்னாபிஷேகம் ஐப்பசி மாதத்தில் நடைபெறும். இங்கு வைகாசி பெளர்ணமியில் விஷேஷம். ஆரம்பத்தில் அம்பாள் இங்கு  உக்கிரமாக இருந்தாள். உக்கிரமான அம்பிகையைச் சாந்தப்படுத்தும் வகையில் ஸ்ரீ சக்கரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி சாந்தப்படுத்துவர். இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரத்துக்குப் பதிலாக இரண்டு தாடகங்களை காதில் அணிகலனாக பூட்டிவிட்டார். அம்மாவைச் சாந்தப்படுத்தும் வகையில் அம்மாவின் பிள்ளைகளான விநாயகர் அம்பாளுக்கு எதிரேயும், பின்புறம் முருகனும் ஆதிசங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்டார். அம்பாள் ஆடி மாதத்தில் சிவனுக்கு தவம் இருந்ததால் ஆடிவெள்ளி இங்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அகிலாண்டேஸ்வரி காலையில் லட்சுமி தேவியாகவும், உச்சிக் காலத்தில் பார்வதியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தந்து அருள் பாலிக்கிறாள். சிவன் அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய, தேவி மாணவியாக கற்றறிந்தாள். கல்வி கற்கும் மாணாக்கர்கள் கல்வியில் மேன்மை பெற  இத்தலகத்துக்குச் சென்று வழிபட்டால் கல்வியறிவு பெருகும் என்பது ஐதிகம். இக்கோயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. பள்ளியறை உண்டு ஆனால் பள்ளியறை பூஜையும் கிடையாது.
திருமணத்தடை போக்கவும்,குழந்தைப் பேறுகிடைக்கவும் வாழ்வில் சகல சந்தோஷங்களையும் பெறவும் ஜம்புகேஸ்வரரையும் அகிலாண்டேஸ்வரியையும் தரிசிப்போம். 

Trending News

Latest News

You May Like