1. Home
  2. ஆன்மீகம்

இது தெரியுமா ? கேது தோஷம் நீக்கும் நாகநாதசுவாமி திருக்கோயில்!

1

கேதுவுக்கு தனி சந்நிதி கொண்ட கோயில் - அறிவையும், ஞானத்தையும், மோட்சத்தையும் அருளும் கேது விளங்கும் தலம் - ராகு, கேது தோன்றிய பூமி என பெருமைமிக்க தலமாக விளங்குவது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள, கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி திருக்கோயில்.

தலபுராணம்: அமிர்தம் எடுக்க, தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, தோன்றிய கொடிய நஞ்சினை சிவபெருமான் விழுங்கினார். அந்த நஞ்சு உடலில் சென்று விடாமல் இருக்க, அன்னை பார்வதி, அதனை தொண்டையிலேயே தாங்கிப் பிடித்ததனால், இறைவன் நீலகண்டனானார்.அமிர்தம் கிடைக்காத கோபத்தில் அசுரர்கள் வாசுகிப்பாம்பை சுருட்டி வீசி யெறிந்தனர்.

அது கடற்கரையோரம் இருந்த மூங்கில் காட்டில் விழுந்தது. உடல் நலிந்த வாசுகி, இறையருளால் உயிர்பெற்றது. இறைவன் தன் நஞ்சை உண்ண நேர்ந்ததற்கு மன்னிக்க வேண்டி தவம் இயற்றியது. தவத்திற்கு மனமிரங்கிய சிவபெருமான் காட்சி தந்தார். இதனால் மனம் மகிழ்ந்த வாசுகி நாகம், தான் தவமியற்றிய இந்த மூங்கில் காட்டில் இறைவன் எழுந்தருளி, கேது கிரக தோஷம் உள்ளவர்களைக் காத்தருள வேண்டும் என வரம் கேட்டது. அதன் விருப்பப்படி இறைவன் நாகநாத சுவாமியாக தன் துணைவி அன்னை செளந்திர நாயகியோடு எழுந்தருளினார் என்பது தலபுராணம்.

கேதுவின் கதை: கேது பிறப்பில் அசுர குலத்தினைச் சார்ந்தது. இளமைப் பெயர் ஸ்வர்பானு. தந்தை விப்ரசித்து, தாய் சிம்கிகை, பாற்கடலில் தோன்றிய அமிர்தத்தை மோகினி வடிவம் கொண்ட திருமால் தேவர்களுக்கு பரிமாறிக்கொண்டிருந்தார். இதனை உண்ணும் ஆவலில், ஸ்வர்பானு தேவர் வடிவம் கொண்டு சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே அமர்ந்தது. அமிர்தத்தை உண்டு மகிழ்ந்தது. இதனையறிந்த சூரியனும் சந்திரனும் மோகினியிடம் தெரிவிக்க, மோகினி தன்னிடம் இருந்த கரண்டியால் அசுரனின் தலையில் ஓங்கி அடித்தது. தலை வேறாக, உடல் வேறாகவும் பிரிந்தது. தலை பாம்பு உடலைக் கொண்டு கருநிற ராகுவாகவும், உடல் ஐந்து நாகத் தலைகள் கொண்ட செந்நிற கேதுவாகவும் மாறின. ராகு கேது இருவரும் தவம் செய்து கிரகங்களின் பதவியைப் பெற்றன. இவர்களில் கேது, கீழப்பெரும்பள்ளத்தில் நாகநாதசுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ளது.

ஆலய அமைப்பு: கிழக்கு நோக்கிய திருக்கோயில், ராஜகோபுரம் இன்றி எளிய நுழைவாயில் அமைந்துள்ளது. எதிரே நாகதீர்த்தம் எனும் திருக்குளம் அமைந்துள்ளது.

ஆலயத்தின் உள்ளே விநாயகர், வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர், துர்க்கை, லட்சுமி நாராயணர், மகாலட்சுமி, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் சந்நிதிகள் அமைந்துள்ளன. சனீஸ்வரர், பைரவர், நாகர், சூரியன் சந்நிதிகளும் உள்ளன. மேற்கு நோக்கியபடி கேது பகவான் சந்நிதி அமைந்துள்ளது.
நடுநாயகமாக நந்தி, பலிபீடத்தைக் கடந்து, கருவறையில் நாகநாத சுவாமி லிங்கத் திருமேனியாகக் காட்சி தருகிறார். தென்திசை நோக்கியபடி அன்னை செளந்திரநாயகி அருள் காட்சியளிக்கின்றாள்.

தலமரம், தீர்த்தம்: தலமரம் மூங்கில் மரம், தலத் தீர்த்தம் நாக தீர்த்தம் ஆகும்.

விழாக்கள்: இவ்வாலயத்தில் முக்கிய விழாவாக, வாசுகி உற்சவம் கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று கேதுவுக்குச் சிவபெருமான் காட்சி தந்த ஐதீக விழா வெகு விமரிசையாகக் கொண்டாப்பட்டு வருகிறது.

தரிசன நேரம்: காலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும்; மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம். இது தவிர, நாள்தோறும் ராகு காலம், எமகண்டம் நேரங்களில் கேது சந்நிதியில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

நாடாளும் மன்னனிடம், வெவ்வேறு துறைகளைக் கவனிக்க அமைச்சர்கள் உள்ளது போன்று, இறைவனின் ஆட்சியில் ஒன்பது கிரகங்களும் தங்கள் துறைக்கேற்றபடி, மக்களின் நன்மை தீமைகளுக்கு ஏற்ப பலன்களை அளித்து வருகின்றன. அந்த வகையில், நவக்கிரகங்களில் ஒன்பதாவது கிரகமான கேது, அறிவையும், ஞானத்தையும் மோட்சத்தையும் அருள்புரிகிறார். கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வந்து பரிகாரம் செய்து கொள்வது நல்ல பலன்களைத் தரும்.

நிர்வாகம்: இந்து சமய அறநிலையத்துறை இக்கோயிலை நிர்வாகம் செய்து வருகிறது.

அமைவிடம்: மயிலாடுதுறை - பூம்புகார் வழித்தடத்தில் தருமகுளம் இறங்கி, 2 கி.மீ. தொலைவில் உள்ள கீழப்பெரும்பள்ளம் வரலாம். இதுதவிர, குறித்த நேரத்தில் நேரடி பேருந்து வசதி உள்ளது.

சுற்றியுள்ள தலங்கள்: இக்கோயிலைச் சுற்றிப் பல்வேறு பழைமையான தலங்கள் அமைந்துள்ளன. காவிரிப்பூம்பட்டினம் எனும் பூம்புகார், மேலப்பெரும்பள்ளம், சாயாவனம், பல்லவனீச்சரம், வனதுர்க்கை என பல்வேறு தலங்கள் அமைந்துள்ளன.

Trending News

Latest News

You May Like