1. Home
  2. ஆன்மீகம்

இது தெரியுமா ? குபேரனின் அருள் பெற்றால் அந்த ஆண்டு முழுவதும் சுபிட்சமாக விளங்கும்..!

1

இந்திரனின் வேண்டுகோளுக்கிணங்கியே ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா நரகாசுரனை வதம் செய்தார். என்வே இந்திரனின் பொக்கிஷதாரரான குபேரனை தீபாவளி நாளில் வழிபடுகின்றனர். குபேரனின் அருள் பெற்றால் அந்த ஆண்டு முழுவதும் சுபிட்சமாக விளங்கும் என்பது நம்பிக்கை. 

குபேரன் துதி 

வளம் யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி 

தனம் தந்து காத்திடுவாய் தனபதியே போற்றி 

குறைவிலா வாழ்வளிப்பாய் குபேரனே போற்றி 

உறைந்திடுவாய் நீ இங்கே உத்தமனே போற்றி 

சங்கநிதி பதுமநிதி சார்ந்து நிற்பாய் போற்றி 

மங்களங்கள் தந்து எமை மகிழ்விப்பாய் போற்றி 

பொங்கிடும் நலம் யாவும் உன்னருளே போற்றி 

தங்கிடச் செய்வாய் செல்வம் போற்றினோம் போற்றி போற்றி 

பித்ரு வழிபாடு:

தீபாவளியன்று வரும் அமாவாசையில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது விசேஷமாகும்.தீபாவளியன்று மாலை வீட்டின் வெளிப்புறம் தீபம் ஏற்றினால், யமதரிமனுக்குத் திருப்தி ஏற்பட்டு அதனால் அந்த வீட்டில் யாருக்கும் அகால மரணம் ஏற்படாது. யாருக்கும் நரக பயம் இல்லை.” என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது.யமன் தன் தங்கையான யமுனைக்கு தீபாவளியன்று பரிசுகளை வழங்குவானாம். அதனால் அன்று அண்ணன் தன் தங்கைகளுடன் விருந்துண்டு அவர்களுக்கு ஆபரணங்கள், துணிமணிகள், பணம் கொடுப்பது வடநாட்டினர் வழக்கமாக இருந்து வருகிறது.அன்று புண்ணிய நதிகளில் நீராடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது.

புராணக்கதைகள்:

நரகாசுரனை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா வதம் செய்ததும், நரகாசுரனின் தீய குணங்கள் மறைந்து அவனிடம் காருண்யம் பெருக்கெடுத்தது. ஆதலால் அவன் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம், “ எம்பெருமானே! தாங்கள் கங்கையிடம் கூறி, இந்த உலகிலுள்ள நீரில் எழுந்தருள அருள் புரிய வேண்டும்” என்று வேண்டினான். அதற்கு எம்பெருமானும் இசைந்தார். கங்காதேவியும் அதன்படி அன்று அதிகாலை மட்டும் எல்லா நீரிலும ஆவாகனமாகி விடுகிறாள். அதனால் தான் தீபாவளி அன்று குளிப்பதை கங்கா ஸ்நானம் என்கிறார்கள் பெரியோர்கள்.மகன் நரகாசுரன் மறைந்தான் என்பது வருத்தத்தைத் தந்தாலும் அதனை வெளிப்படுத்தாமல் மற்றவர்கள் சந்தோஷமாக பண்டிகையாக கொண்டாட வேண்டும் என வரம் கேட்டாள் மண்மாதா. நாம் வருந்தினாலும் பிறர் வருந்தக் கூடாது என்ற உயர்வான எண்ணத்தை உருவாக்கும் பண்டிகை தீபாவளி. 

மகாபலி என்ற அசுரனின் பிடியிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி ஸ்ரீமத் நாராயணனிடம் தேவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அதனால் ஸ்ரீமத் நாராயணன் வாமன வடிவம் எடுத்து அந்தணச் சிறுவனாகாக் கையில் குடையுடன் தோன்றி, மகாபலியிடம் 3 அடி நிலம் கேட்டார். மகாபலியும் அதற்கு இசைந்தார். நர்மதைக்கரையில் விசுவரூபம் எடுத்த வாமனர் (ஐப்பசி மாதம் திரயோதசி அன்று) முதல் 3 தினங்களில் தமது காலால் மூன்று உலகங்களையும் அளந்தார். மூன்றாவது அடியை மகாபலியின் சிரத்திலே வைத்து அழுத்தி அடக்கினார். அப்போது மகாபலி, “ தங்களுக்கு நான் ஆண்ட உலகங்களைத் தானமாகக் கொடுத்ட இந்த 3 நாட்களில் நடுவில் உள்ள சதுர்த்தசி அன்று இரவின் முடிவில் மக்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். எங்கும் இருள் அகன்று ஒளி பரவ வேண்டும்” என வரம் அருளும்படி வேண்டினான். பெருமானும் அவ்விதமே வரமளித்தார். அந்த நாளே தீபாவளி நன்னாளாகும்.

14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய ஸ்ரீராமன், லட்சுமணன் ஆகியவர்களை அயோத்தி மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி, புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அந்நாளே தீபாவளி என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

சக்தியின் 21 நாள் விரதாமன கேதாரகௌரி விரதம் முடிவுற்றதும், அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக்கொண்டு ”அர்த்தநாரீஸ்வரர்” ஆக உருவெடுத்ததால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணம் கூறுகிறது.

தீபத்தத்துவம்:

சுபிட்சத்தை கொண்டு வரும் தீபாவளி

நரகாசுரனை வதம் செய்வதற்காக கிருஷ்ண பரமாத்மா கிளம்பினார். அச்சமயத்தில் பாணாசுரன் முதலான அரக்கர்கள், “லட்சுமி தேவியைத் தூக்கிக் கொண்டுவர வேண்டும்” என்று கிளம்பினார்கள். இதையறிந்த லட்சுமி தேவி அரக்கர்கள் வருவதற்குள் அங்கு எரிந்து கொண்டிருந்த தீபச்சுடரில் ஐக்கியமாகிவிட்டாள். தீபத்தில் திருமகள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதால் அன்று விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து தீபத்தில் திருமகளை பூஜை செய்ய வேண்டும்.

தீபம் ஏற்றினால் இருள் அகன்றுவிடும். அதுபோல் உள்ளக்கோயிலில் ஞான விளக்கை ஏற்றினால் அறியாமை என்ற இருள் தானாகவே விலகும். நம்மிடம் உள்ள காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சரியம் போன்ற தீய சக்திகளை இறைவனுடைய திருநாமங்களாகிய பட்டாசுகளினால் சுட்டுத் தள்ளுங்கள். அதுவே தீபாவளி என்று பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள்.

Trending News

Latest News

You May Like