1. Home
  2. ஆன்மீகம்

இது தெரியுமா ? ஆண்டாளுக்காக அரங்கனிடம் எடுத்துரைத்த கருடாழ்வார்..!

1

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் ராஜகோபுரம், 196 அடி உயரமுடையது. இரட்டைக் கோவிலாக அமைந்துள்ள இதன் வட கிழக்கில் மிகப் பழமையான வடபத்ரசாயி கோவிலும், மேற்கில் ஆண்டாள் திருக்கோவிலும்  உள்ளது. இறைவனுக்கு பாமாலையோடு, பூமாலை சூட்டி மகிழ்ந்த பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனம் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. 

இங்கு ஆண்டாளுக்குத் தனிச் சன்னதி ஒன்றும், அதன் முன்புறம் துளசி மாடம் ஒன்றும் உள்ளது. தான் விரும்பிய வாழ்க்கை துணையை, தனது தூய பக்தியாலும், காதலாலும் அடைந்த ஆண்டாள்  அருள் பெற்ற இந்த தலத்தில் இருந்து மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாலோ, சிறிதளவு எடுத்துச் சென்று வீட்டில் பத்திரப்படுத்தினாலோ திருமணத் தடை நீங்கி செல்வம் சேரும் என்பது பக்தர்களின்  நம்பிக்கை. 

கோதை நாச்சியார் எழுந்தருளியிருக்கும் இத்திருக்கோவில் முழுதும் கருங்கற்களால் ஆனது. கருவறை விமானத்தில் திருப்பாவை பாசுரங்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மணி மண்டபத்தின் கம்பம் ஒன்றில், ஆண்டாள் தினமும் தன் மனம் கவர்ந்த மணாளனான அரங்கனுக்காக தொடுக்கப்பட்ட மாலையை தனது கழுத்தில் அணிந்து அழகுப்  பார்த்த தட்டொளி எனப்படும் வெண்கலத்தட்டு (கண்ணாடி) காணப்படுகிறது.

இடக்கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் ரங்கநாதர் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் கூப்பிய கரங்களுடன் பெரியதிருவடி என்று போற்றப்படும் கருடாழ்வார் உள்ளார். 

பெரியாழ்வாருக்கு கொடுத்த வாக்கின்படி கோதையை அரங்கன் ஏற்றுக்கொள்ளும் அந்த நாளும் வந்தது. ஊரார், உறவினர் அனைவரும் கோதையை  மணப்பெண்ணாக அலங்கரித்து வந்து பெருமானிடம் சேர்க்க வருகின்றனர். நேரம் போனதே தவிர பெருமானைக் காணோம்.

ஆண்டாள், கருடாழ்வாரை மனமுருக பிரார்த்தனை செய்து, 'பரந்தாமனை உடனே அழைத்துவந்தால், எங்கள் அருகிலிருக்கும் பாக்கியம் உங்களுக்கு உண்டு' என்று வேண்டுகிறார்.

கருடாழ்வார் மறுகணமே பெருமானிடம் சென்று, ஆண்டாளின் நிலையை எடுத்துச் சொல்ல, பரந்தாமன் கையில் செங்கோல் ஏந்தி, ரங்கமன்னனாக, அனைவரின் முன் தோன்றி ஆண்டாளை கரம் பிடிக்கின்றார். 

தனது வேண்டுதலுக்கு கருடாழ்வார் உதவியதால், ஆண்டாளின் வாக்குப்படியே ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பெருமானுக்கு அருகிலிருக்கும் பாக்கியத்தை கருடாழ்வர் பெற்றார் என்கிறது புராணம்.

நாள்தோறும் விடியற்காலையில் பிராட்டியின் சன்னதியில் காராம்பசு ஒன்று கொண்டுவந்து நிறுத்தப்படும். தேவியின் திருப்பார்வை காராம்பசுவின் பின்புறம் விழும். தேவி தினமும் கண் விழிப்பது இப்படித்தான். இறைவனுக்கு  கொடுக்க தொடுக்கப்பட்ட  பூமாலையுடன், ஆண்டாள் இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொள்வது வழக்கமாம். அதனால் இங்குள்ள கிணறு கண்ணாடிக் கிணறு என அழைக்கப்படுகிறது.

ஒரு முறை  ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், என்ன வரம் வேண்டும்? என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்! என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.

ஆண்டாளின்  இடத்தோளை அலங்கரிக்கும்  கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது. கிளி மூக்கு - மாதுளம் பூ, மரவல்லி இலை - கிளியின் உடல், இறக்கைகள் - நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும், கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள், கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன் என்று சொல்லப்படும் பொருளைப்  பயன்படுத்தி கிளியை உருவாக்குகின்றனர்.

தூய அன்பாலும் பக்தியாலும் இறைவனை யாரும் எளிதில் அடைந்துவிட முடியும் என்பதற்கு கோதை நாச்சியாரே சாட்சி.

ஆண்டாள் திருவடிகளே சரணம்...

Trending News

Latest News

You May Like