1. Home
  2. ஆன்மீகம்

பதவி உயர்வு வேண்டுபவர்களும் பதவி இழந்தவர்களும் இந்த மூன்று கோவில்களில் பிரார்த்தனை செய்தால்...

1

ஸ்ரீநரசிம்மர் வழிபாடு என்பது மிகப் பழமையான நாளிலேயே தோன்றியதாகும். ஸ்ரீநரசிம்மரைப் பற்றி 18 புராணங்களிலும், முக்கியமாக ஸ்ரீமத் பாகவத் புராணம், பிரம்மாண் புராணம், பத்ம புராணம், ஸ்ரீஅரிவம்சம், ஸ்ரீவிஷ்ணு புராணம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது விசேஷமாகும். முதன் முதல் வேதமாகப் போற்றப்படுகின்ற ரிக் வேதத்தில் ஸ்ரீநரசிம்மரைப் பற்றிய குறிப்புள்ளது.

ஸ்ரீநரசிம்ம அவதாரம் என்பது விஷ்ணுவின் மிக முக்கியமான அவதாரமாகும். தன்னுடைய மிகச் சிறந்த பக்தனான பிரகலாதனுக்காக, அசுரத்தன்மை உடைய தந்தையான இரண்யகசிபுவினிடமிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக தோன்றிய அவதாரமாகும்.

ஸ்ரீ நரசிம்மரின் அவதாரம் மக்களுக்கு அவருடைய அவதார மகிமையின் மூலமாக, அவர்பால் ஈர்ப்பு தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால் தான் இன்றும் பல திருக்கோவில்களில் தம் வாழ்நாளில் கடுமையான பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டவர்களே ஸ்ரீநரசிம்ம பகவானுக்கு பூஜை செய்கின்றனர்.

ஆகையால் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடனும், பக்தியுடனும் அக்கோவில்களுக்கு சென்று, தங்கள் மனவிருப்பம் நிறைவேற்றுவதற்காக தங்களால் இயன்ற பூஜையை செய்கின்றனர்.

தமிழகத்தில் சோளிங்கர், நாமக்கல், பூவரசங்குப்பம், பரிக்கல், சிங்கிரிக்குடி, சிங்க பெருமாள்கோயில், அந்திலி, சிந்தலவாடி, ஆகிய 8 தலங்களும் அட்ட நரசிம்ம தலங்களாக உள்ளன. அவற்றில், ஒரே நாளில் தரிசிக்கக்கூடிய வகையில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன.

சிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று தலங்களே அவை. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப்பிரச்சினைகள் மற்றும் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சிங்கிரிக்குடி

பூவரசன்குப்பத்தில் இருந்து சிங்கிரிக்குடி 26 கி.மீ. பெருமாளின் திருநாமம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர் (உக்ர நரசிம்மர்). தாயாரின் திருநாமம்: ஸ்ரீகனகவல்லி தாயார். தரிசன நேரம்: காலை 7.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை; மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

திருமணம் தடைப்படும் அன்பர்கள் இங்கு வந்து ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிகை. இங்குள்ள உக்ர நரசிம்மரை வழிபட எதிரிகளின் தொல்லைகள் இருக்காது.

பூவரசன்குப்பம்

பரிக்கல்லில் இருந்து பூவரசன்குப்பம் 39 கி.மீ. பெருமாளின் திருநாமம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர். தாயாரின் திருநாமம்: ஸ்ரீஅமிர்தவல்லி தாயார். தரிசன நேரம்: காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

பூவரசன்குப்பம் நரசிம்மரை வழிபட, உடற்பிணி மற்றும் சகலவிதமான தோஷங்களும் நீங்கும்.

பரிக்கல்

விழுப்புரத்திலிருந்து உளுந்தூர் பேட்டை செல்லும் வழியில், விழுப்புரத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது பரிக்கல். பெருமாளின் திருநாமம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மர். தாயாரின் திருநாமம்: ஸ்ரீகனகவல்லி தாயார். திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால், அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அமைந்துள்ள இந்த 3 லட்சுமி நரசிம்மர் கோவில்களும் மேற்கிலிருந்து கிழக்காக ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. ஒரே நாளில் இந்த லட்சுமி நரசிம்மர் கோவில்களை தரிசிப்பது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.

காலையில் சிங்கிரிகுடி, பகலில் பூவரசன்குப்பம், இறுதியில் பரிக்கல் என்ற வரிசைப்படி தரிசிக்க வேண்டும்.

பிரார்த்தனை தலங்கள்

சிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று தலங்களும் பிரார்த்தனைக்குரிய தலங்கள் ஆகும். எனவே இந்த மூன்று தலத்திலும் நரசிம்மரிடம் நாம் என்ன வேண்டுதல் வைத்தாலும் அவற்றை நரசிம்மர் நிறைவேற்றி தருவார் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.

Trending News

Latest News

You May Like