உணவுகளில் உப்பு கூடி விட்டால் என்ன செய்வது ?

"தினமும் பண்ற சமையல்தான்... ஆனா, என்னிக்கும் ஒரே சுவை வரமாட்டேங்குதே... சில நாள் உப்பு, சில நாள் காரம், புளிப்பு, தண்ணீர்னு ஏதாவது ஒண்ணு கூடிப் போகுதே’’னு உங்க 'அடுக்களை மனசு' அடிக்கடி சோர்ந்து போகுதா?
கவலையை விடுங்க... உப்பு, புளிப்பு, காரம்னு எது உங்க சமையல்ல தப்பு தாளம் போட்டாலும் அதையெல்லாம் சரி செஞ்சிடலாம்.
உப்பு அதிகமாகிவிட்டதா?
குழம்பு, சாம்பார், கூட்டு, கிரேவி போன்ற திரவ வடிவ பதார்த்தங்களில் உப்பு அதிகமாக இருந்தால்... வெங்காயம், கசகசா, புளிப்பில்லாத தக்காளி, துருவிய தேங்காய், பயத்தம்பருப்பு, முந்திரிப் பருப்பு முதயவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை லேசாக எண்ணெயில் வறுத்து (அல்லது) வதக்கி, மிக்ஸியில் அரைத்து சேருங்கள். மீண்டும் ஒருமுறை கொதிக்க விடுங்கள். உப்பு தேவையான அளவுக்கு மாறிவிடும். மேலே சொன்ன பொருட்களில் எது, நீங்கள் தயாரித்திருக்கும் உணவுக்கு பொருத்தமாக இருக்கும் என்று பார்த்துச் சேர்ப்பது முக்கியம்.பொட்டுக்கடலை மாவு, அல்லது சோள மாவு இருந்தாலும் அவற்றைப் பால் கரைத்து குழம்பில் சேர்த்தும் உப்பின் ருசியை சரி செய்யலாம்.
ரசத்தில் உப்பு அதிகமாக இருந்தால்... ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு ரசத்தைக் கொதிக்க விட்டு, மிளகு, சீரகத்தூள் போட்டு, அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து விடுங்கள்.

எலுமிச்சம்பழ அளவு சாதத்தை உருட்டி... சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டி உப்பு கூடின குழம்பில் போட்டு விடுங்கள். உப்பின் அளவுக்கு ஏற்ப இரண்டு மூன்று உருண்டைகள் கூடப் போடலாம். அரை மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து விட்டால் உப்பு சரியாக இருக்கும் (வேக வைத்த உருளைக்கிழங்குத் துண்டுகளையும் போடலாம்).
அரைத்து வைத்துள்ள இட்லி-தோசை மாவில் உப்பு அதிகமானால், ஒரு கரண்டி ரவையை வெறும் வாணயில் வறுத்து, ஐந்து நிமிடங்கள் பால் ஊற வைத்து, மாவுடன் சேர்த்து விடுங்கள்.இரண்டு கரண்டி அரிசி, அரைக் கரண்டி உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் மைய அரைத்து தோசை மாவில் சேர்த்து விட்டால் உப்பு சரியாகிவிடும்.
பொரியல் வகைகளில் உப்பு அதிகமானால், தேங்காயைத் துருவிச் சேர்க்கலாம்.ஒரு கரண்டி பயத்தம் பருப்பை வெந்நீரில் கால் மணி நேரம் ஊற வைத்து, அதைப் பொரியல் கலந்து விடலாம்.நான்கில் ஒரு பாகம் பொரியலை (பீன்ஸ், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், அவரை, உருளைக்கிழங்கு போன்றவை) எடுத்து வடிகட்டியில் போட்டு, சுத்தமான தண்ணீரை ஊற்றிக் கழுவி விட்டால் உப்பு சுவை போய் விடும். இதை மீதமுள்ள முக்கால் பாகப் பொரியல் கலந்து ஒரு புரட்டு புரட்டி விட்டால் போதும்... உப்பு சுவை சரியான அளவுக்கு வந்துவிடும்.கத்தரிக்காய், கோவைக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்றவற்றுடன் வெங்காயம் நன்கு சேரும். எனவே, இந்த வகைப் பொரியல்களில் உப்பு அதிகமானால், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கிச் சேர்த்து விடலாம்.
பொடி வகைகளில் உப்பு அதிகமாகிவிட்டால், அதிலுள்ள பருப்பு எதுவோ அதைக் கொஞ்சம் வாணயில் வறுத்து, தனியாகப் பொடி செய்து நன்கு கலந்து விடவும்.
பருப்பு சேர்க்காத பொடி என்றால் (தனியாப்பொடி, கறிமசலாபொடி போன்றவை), கறிவேப்பிலையைக் கொஞ்சம் எடுத்து, எண்ணெயில் வறுத்துப் பொடித்து, உப்பு கூடிப்போன பொடியில் கலந்து விடலாம்.